நீட்டிக்கப்பட்ட நல்ல திட்டம்

நவம்பர் 30 அன்று முடிவடையும் என சொல்லப்பட்ட இலவச ரேஷன் திட்டத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டித்துள்ளது மத்திய அரசு. இத்திட்டத்தால் தேசம் முழுவதும் சுமார் 80 கோடி பயனாளிகளுக்கு மத்திய அரசு ரேஷன் மூலமாக நபர் ஒருவருக்கு 5 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்கி வருகிறது. தமிழகம் உட்பட பல மாநில அரசுகள் ஏதோ இதனை தாங்களே இலவசமாக வழங்குவது போல சித்தரித்து நல்ல பெயர் வாங்கிக்கொள்கின்றன என்பது வேறு விஷயம்.

ரேசனில் தரப்படும் இலவச அரிசி, கோதுமைதானே, அதில் என்ன பெருமை என்று சிலர் இந்த செய்தியை கடந்து சென்று விடுவார்கள். ஆனால், கடந்த 2020ல் உலகமெங்கும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, சர்வதேச அளவிலான பொதுமுடக்கம் என உலகமே திடீரென தலைகீழாக மாறியபோது அன்றில் இருந்து இன்றுவரை நம்மில் பலர் இந்த ரேஷன் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களால்தான் பசியின்றி மானத்துடன் வாழ்ந்தோம் என்பது மறுக்கமுடியாத உண்மை.

கடும் பொருளாதார நெருக்கடி, தேச பாதுகாப்பு, இலவச கொரோனா தடுப்பூசி, தேச வளர்ச்சி, தொழில்துறை முன்னேற சலுகைகள், கடன் திட்டங்கள் என பல்முனை அழுத்தங்களுக்கு இடையேயும் இத்திட்டம் இடைநிறுத்தம் இல்லாமல் தொடரப்பட்டது. 130 கோடி மக்கள்தொகை கொண்ட மிகப்பெரிய நாட்டில் இத்தனை மாதங்களாக மத்திய அரசு இப்படி இலவசமாக தருவதை உலக நாடுகளே இன்றுவரை வியப்புடன் பார்க்கின்றன. ஏனெனில் இந்த சாதனை அவர்களால்கூட நிகழ்த்த முடியாதது. அங்கெல்லாம் உண்மை நிலைமை படுமோசம் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கொரோனா ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், நமது நாடு இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துவிட்டாலும், சிலருக்கு இன்னமும் சிக்கல்கள் தொடரத்தான் செய்கின்றன. அவர்கள் வாழ்வும் இயல்பு நிலைக்குத் திரும்ப சில காலம் பிடிக்கும் என்பதால், நீட்டிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் அவர்களுக்கு எல்லாம் கண்டிப்பாக ஒரு வரபிரசாதம்தான்.

மதிமுகன்