கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும், பெங்களூரு முன்னாள் காவல்துறை ஆனையருமான பாஸ்கர் ராவ், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியில் (பா.ஜ.க) இணைந்தார். ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கைக் குழுவின் தலைவராக இருந்த ராவ், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அக்கட்சியில் சேர்ந்தார். முன்னாள் கூடுதல் டைரக்டர் ஜெனரல் (ஏடிஜிபி) தரவரிசையில் உள்ள அதிகாரியான இவர், “ஆம் ஆத்மி கட்சியில் வெளிப்படைத்தன்மை இல்லாதது தான் கட்சியில் இருந்து வெளியேற காரணம். அது ஒரு பன்னாட்டு நிறுவனம் போல் நடத்தப்படுகிறது. ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் நன்கொடை வசூலிக்கப்படுகிறது. அக்கட்சி ஒரு கூட்டத்தின் கைகளில் சிக்கிக்கொண்டு உள்ளது. அவர்களின் இரண்டு அமைச்சர்கள் சிறையில் இருப்பது வெட்கக்கேடானது. கட்சியில் தெளிவு இல்லை” என குற்றம் சாட்டினார். மேலும், “பிரதமரின் பணிகளைப் பார்த்து பா.ஜ.கவில் இணைந்தேன். நான் பா.ஜ.கவுக்கு அதிக பங்களிப்பை வழங்க முடியும் என்று நினைக்கிறேன். பா.ஜ.க பாரத அளவில் மிகப்பெரிய இருப்பைக் கொண்டுள்ளது. பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை என்னை கட்சியில் சேர தூண்டியது” என்றார். முன்னதாக, கர்நாடகா வருவாய்த்துறை அமைச்சர் ஆர். அசோகா, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோரை சந்தித்துப் பேசிய பிறகு பா.ஜக.வில் சேர ராவ் முடிவு செய்தார். பாஸ்கர் ராவ், கடந்த ஆண்டு தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். பசவனகுடி சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிடும் நோக்கத்தையும் கொண்டிருந்தார்.