மதுரை வழக்கறிஞருக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன – என்.ஐ.ஏ.,

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பின் செயல்பாடுகளுக்கு, தடை விதித்த பின், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, அந்த அமைப்பு நிர்வாகிகள் மீது, என்.ஐ.ஏ., வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், மேல் விசாரணைக்கு அனுமதி கோரி, என்.ஐ.ஏ., மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் இருந்த நிலையில், கடந்த மே மாதம், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது அப்பாஸ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். தன் மீதான வழக்கை ரத்து செய்வதோடு, விசாரணைக்கும் தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முகமது அப்பாஸ் மனு தாக்கல் செய்தார். மனு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.விவேகானந்தன் ஆஜராகி வாதாடியதாவது: பி.எப்.ஐ., அமைப்பு நிர்வாகிகளுக்காக, வழக்கில் ஆஜரானதால் கைது செய்யப்பட்டு உள்ளார். எந்த ஆதாரங்களும் இல்லாமல், புலன் விசாரணை அதிகாரி, வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். ‘பென் டிரைவ்’ பறிமுதல் செய்ததாக, என்.ஐ.ஏ., அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். அதை வைத்திருப்பது குற்றமாகாது. பறிமுதல் செய்த அந்த பென் டிரைவில் ஆதாரங்கள் உள்ளனவா என, கண்டறிய வேண்டும். பி.எப்.ஐ., அமைப்பின் முக்கிய தலைவராகவும், ஆயுத பயிற்சி அளிப்பவராகவும் இருந்தார் என, எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டியுள்ளனர். இவ்வாறு அவர் வாதிட்டார். உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கம், மதுரை பார் அசோசியேஷன் சார்பிலும், முகமது அப்பாஸ் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டன. பின், என்.ஐ.ஏ., தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடியதாவது: இந்த வழக்கில், வழக்கறிஞர் சம்பந்தப்பட்டு உள்ளதால், என்.ஐ.ஏ., எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளது. மார்ச்சில், இந்த வழக்கில் முதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தபோதே, முகமது அப்பாசுக்கு எதிராக ஆதாரங்கள் கிடைத்தன. இருப்பினும் கூடுதல் ஆதாரங்களுக்காக காத்திருந்து, தற்போது வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளார். பறிமுதல் செய்த பென் டிரைவில் ‘ஆடியோ’ உள்ளது. தொலைபேசியை ஒட்டுக் கேட்ட போது கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர் வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளார். ஆதாரங்களின்படி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் இருப்பவரின் காவலை, சட்ட விரோதம் எனக் கூற முடியாது. வழக்கு தொடர்பான, ‘கேஸ் டைரி’யை நீதிமன்றம் ஆராயலாம். இவ்வாறு அவர் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களுக்கு பின், ‘கேஸ் டைரி, ஆடியோ கிளிப்’ ஆகியவற்றை தயாராக வைத்திருக்கும்படி, என்.ஐ.ஏ.,க்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 21க்கு தள்ளிவைத்தனர்.