உறுப்பு தானம் செய்ய ஊக்கப்படுத்துங்கள்

டெல்லியில் ததீசி தேக தான சமிதியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில், உடல் உறுப்பு தானத்திற்கான தேசிய பிரச்சாரத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், “மகரிஷி ததீசி ஜெயந்தியை முன்னிட்டு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உறுப்பு தானம் ஒரு முக்கியமான பிரச்சனை. உறுப்பு தானத்திற்கான ஆதரவு அமைப்பை உருவாக்க வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் சரியான சூழலை உருவாக்க முயற்சிக்கும் ததீசி தேக தான சமிதியை பாராட்டுகிறேன். இந்த முயற்சிகள் குடும்பநிலை வரை சென்றடைய வேண்டும். இந்த பணியில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த நல்ல அர்த்தமுள்ள செய்தியை பரப்புவதற்கு ஒவ்வொரு ஊடகவியலாளரும் பங்களிக்க வேண்டும். மதத் தலைவர்களும் இதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். நமது சொந்த மகிழ்ச்சிக்காகவும், சமுதாயத்திற்குத் திரும்பக் கொடுப்பதற்காகவும், மகா முனிவர் ததீசியின் வாழ்க்கையையும் தத்துவத்தையும் அனைவரும் பின்பற்ற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், ரிஷிகேஷில் உள்ள பரமார்த் நிகேதனைச் சேர்ந்த சாத்வி பகவதி சரஸ்வதியால் “சகரத்மக்தா சே சங்கல்ப் விஜய் கா” என்ற நூல் வெளியிடப்பட்டது. நூலின் முதல் பிரதியை குடியரசு துணைத் தலைவரிடம் சாத்வி வழங்கினார். நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர். ஹர்ஷ்வர்தன், சுஷில் மோடி ஆகியோருடன் ததீசி தேக தான சமிதியின் புரவலரும் மூத்த வழக்கறிஞருமான அலோக் குமார், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மருத்துவ பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.