பிரதமர் நரேந்திர மோடி, சுமார் 71,000 பேருக்கு இன்று, காலை மணி 10:30 அளவில் காணொலிக்காட்சி வாயிலாக வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் பணி நியமன ஆணைகளை பெறுவோருடனும் பிரதமர் உரையாட உள்ளார். நாடு முழுவதும் 45 இடங்களில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுத் துறைகளின் ஆதரவுடன் இந்தப் பணியாளர் சேர்ப்பு நடைபெறுகிறது. நாடு முழுவதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தபால் துறை ஊழியர், பயணச்சீட்டு பரிசோதகர், இளநிலை எழுத்தர், வரி உதவியாளர்கள், உதவி அமலாக்கத் துறை அதிகாரிகள், ஆய்வாளர்கள், செவிலியர், தீயணைப்பு வீரர்கள்,உதவி தணிக்கை அதிகாரிகள், உதவி பேராசிரியர்கள் என பல்வேறு பிரிவுகளை சார்ந்தவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது. வேலைவாய்ப்பு பெருக்கி உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் நோக்கில் இந்த வேலைவாய்ப்பு முகாம் திகழ்கிறது. இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்பதற்கும் அவர்கள், அதிகாரம் பெறுவதற்குமான முறையான வாய்ப்பை அளிக்கும் வகையில், வேலைவாய்ப்பை பெருக்குவதோடு அதற்கான உந்துசக்தியாக இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக பணி நியமன ஆணை பெறுபவர்கள் கர்மயோகி பரம்ப் மூலம் பல்வேறு அரசுத் துறைகளில் பணி மேற்கொள்வதற்கான அடிப்படை பயிற்சிகள் ஆன்லைன் மூலம் அளிக்கப்படும்.