பிராந்திய மொழிக்கு முக்கியத்துவம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான 20 லோக்சபா எம்.பிக்கள், 10 ராஜ்யசபா எம்.பிக்கள் அடங்கிய அலுவல் மொழிக்கான பார்லிமென்ட் குழு, தனது, 11வது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் கடந்த மாதம் தாக்கல் செய்தது. இந்தக் குழு அளித்துள்ள பரிந்துரைகள் குறித்து அதன் துணைத் தலைவரான பிஜு ஜனதா தள கட்சியின் எம்.பி., பார்த்ருஹரி மஹதப் பேசுகையில், “பல்வேறு துணைக் குழுக்கள் மற்றும் பார்லிமென்ட் குழுவில் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலேயே பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் என்பது அன்னிய மொழி. ஆங்கில வழிக் கல்வி என்ற காலனியாதிக்க நடைமுறையை கைவிட வேண்டும். புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், ஹிந்தி மற்றும் பிராந்திய மொழிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று பெரும்பாலான உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதன்படி அனைத்து உயர்நிலைக் கல்வி நிறுவனங்களிலும் ஹிந்தி மற்றும் பிராந்திய மொழி வழியிலேயே பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. மேலும், ஐ.நாவின் அலுவல் மொழியாக ஹிந்தியை சேர்க்கவும் பரிந்துரைத்துள்ளோம்” என கூறினார். இந்தப் பரிந்துரைகளை ஏற்பது குறித்து குடியரசுத் தலைவரே முடிவு செய்வார்.