டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க தொழிலதிபர் எலான் மஸ்க் முடிவு செய்தார். இதற்கான பணிகள் துவங்கியபோது டுவிட்டரில் 20 முதல் 50 சதவீதம் போலி கணக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த கணக்குகளை முடக்க வேண்டும் என எலான் மஸ்க் தெரிவித்தார். ஆனால் டுவிட்டர் நிறுவனம் இதனை மறுத்து 5 சதவீதத்துக்கும் குறைவாகவே போலி கணக்குகள் இருப்பதாக கூறியது. சமீபத்தில், போலி கணக்குகளின் உண்மையான தகவல்களை தராவிட்டால் டுவிட்டரை வாங்கும் முடிவை கைவிடுவேன் என்று எலான்மஸ்க் தெரிவித்திருந்தார். இது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இந்நிலையில் எலான் மஸ்க் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க டுவிட்டர் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த டுவிட்டரின் உயர்மட்ட வழக்கறிஞர் விஜயா காடே, ‘ஜூலை பிற்பகுதி அல்லது ஆகஸ்டில் இந்த ஒப்பந்தம் குறித்து பங்குதாரர்களின் வாக்கெடுப்பை நடத்தலாம் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது. வாக்கெடுப்புக்கு பின்னரே டுவிட்டரை மஸ்க்குக்கு விற்பனை செய்வதா இல்லையா என்று முடிவெடுக்கப்படும் என கூறினார். இருப்பினும் மஸ்க்குடன் தொடர்ந்து சில தகவல்களை டுவிட்டர் பகிர்ந்து வருகிறது. குறிப்பாக டுவிட்டரின் “பயர்ஹோஸ்” குறித்த சில தகவல்களை டுவிட்டர் பகிர்ந்துள்ளது. இந்த “பயர்ஹோஸ்” தகவல்களை டுவிட்டர் சமூக ஊடக கண்காணிப்பு நிறுவனங்களுக்கு விற்கிறது. ஆனால் தகவல் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக அதை மஸ்க்கிற்கு இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது டுவிட்டர் நிறுவனம்.