தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தமிழக அரசின் மானியம் பெற மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே 2 மாதங்களுக்கு முன்பு மின் கட்டணம் 50 சதவீதம் வரை உயர்த்தி பொதுமக்களை தமிழக அரசு வஞ்சித்தது. இந்நிலையில், ஆதார் இணைப்புக்கு போதுமான அவகாசம் கொடுக்காமல் மக்களை இன்னலுக்கு ஆளாக்கியுள்ளனர். எந்த ஒரு விளக்கமும் தராமல், ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், மின் கட்டணம் செலுத்த முடியாது என்று அறிவித்த தி.மு.க அரசு, மக்களின் கடும் எதிர்ப்புக்கு பிறகு டிசம்பர் 31ம் தேதி வரை ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும் மின் கட்டணம் செலுத்தலாம் என அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள மின் பயனாளிகளுக்கு, சத்தம் இல்லாமல் ஒரு புதிய கட்டணத்தை மின்வாரியம் உயர்த்தியுள்ளது. அதாவது, அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள், இனி அவர்களின் கட்டடத்துக்கு உள்ளேயே இருக்கும் மாடிப்படி, நடைபாதை, வராண்டா, புல்வெளிகள், பொது இடங்கள் ஆகிய பகுதிகளுக்கு, விதிக்கப்படும் கட்டணம் 1,500 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது குடியிருப்பில் இருந்தாலும், தொழிற்சாலைக்கான கட்டணம்போல, யூனிட் ஒன்றுக்கு 8 ரூபாய் அளவில் புதிய கட்டணம் விதிக்கப்படுகிறது. பொது பயன்பாட்டு கட்டணம் என்ற பெயரில், பாரதத்திலேயே மிக அதிகமான கட்டணத்தை வசூலிக்கும் தமிழக அரசு, அதை மறைப்பதற்காகவே ஆதார் அட்டை என்ற புதிய சர்ச்சையை அவசர அவசரமாக அரங்கேற்றுகிறது. எனவே, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை தமிழக அரசு கால அவகாசம் கொடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.