கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க ஆட்சியில், நிலக்கரி கொள்முதல் செய்ததில் அரசுக்கு 908 கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்படுத்தியதாக, தமிழக மின்வாரிய அலுவலர்கள் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இதுகுறித்த விசாரணையில், 2011ல் இருந்து 2016 வரை, விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழகத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்ய சௌத் இந்தியா கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்துக்கு, தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) 1,267 கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தம் செய்தது. ஆனால் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் இறக்குமதி செய்த செலவில், போலியாக கணக்குக் காட்டி 239 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்துள்ளது. மீதமுள்ள 908 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளது. இந்த ஊழலுக்கு மின்சார வாரிய அதிகாரிகள் பலரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்பதை கண்டறிந்துள்ளது. இதையடுத்து, அப்போது பணியாற்றி, தற்போது ஓய்வுபெற்றுள்ள 10 மின்சார வாரிய அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, தமிழக மின்வாரிய அலுவலர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் கடந்த 24ம் தேதி சோதனை மேற்கொண்டனர். தமிழகம் முழுவதும் சுமார் 10 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் மற்றும் 360 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த சோதனையில் சௌத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனம் வசமிருந்து 360 கோடி ரூபாய் நிரந்தர வைப்புத்தொகை தொடர்பான ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும், அந்த வைப்பு நிதியை அமலாக்கத்துறை முடக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.