கொலை குற்றவாளிக்கு தேர்தல் சீட்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) தனது இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, பா.ஜ.க தலைவர் பிரவீன் நெட்டாரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷாபி பெல்லாரே கர்நாடகாவின் புத்தூரில் போட்டியிடுகிறார். எஸ்.டி.பி.ஐ கட்சி சமீபத்தில் தடை செய்யப்பட்ட முஸ்லிம் மதவாத, பயங்கரவாத ஆதரவு அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பின் அரசியல் பிரிவு என்ற குற்றச்சாட்டு உள்ளது நினைவு கூரத்தக்கது. கர்நாடகாவின் தட்சிண கன்னடாவின் பெல்லாரே கிராமத்தில் பா.ஜக.வின் யுவ மோர்ச்சா தலைவர் பிரவீன் நெட்டாரு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ அமைப்பின் 20 உறுப்பினர்கள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரவீன் நெட்டாரு ஜூலை 26, 2022 அன்று, பொதுமக்கள் மத்தியில் மற்றும் குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பயத்தை உருவாக்குவதற்காக பயங்கர ஆயுதங்களுடன் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக என்.ஐ.ஏ அதன் குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த இந்த கொடூர கொலை தொடர்பாக தற்போது எஸ்.டி.பி.ஐ கட்சியால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஷாபி பெல்லாரே என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து சிறையில் உள்ளார். என்.ஐ.ஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் 9வது குற்றம் சாட்டப்பட்டவராக அவர் பெயர் இடம் பெற்றுள்ளது. இதனிடையே, எஸ்.டி.பி.ஐ கட்சியின் பொதுச் செயலாளர், ஷாபி பெல்லாரே நிரபராதி என்றும் அரசியல் இலக்குக்கு அவர் பலியாகிவிட்டார் என்றும் கூறி அனுதாபம் தேடினார். மதவாத கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக நியமித்ததற்காக எஸ்.டி.பி.ஐ கட்சியை பா.ஜ.க கண்டித்துள்ளது. வெறுப்புணர்வுக்கு கர்நாடகாவில் தேர்தல் மேடை வழங்குவதாகக் குற்றம் சாட்டியது. மேலும், இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது எஸ்.டி.பி.ஐ ஒரு மத அடிப்படைவாத அமைப்பு என்பதை நிரூபிக்கிறது. அதன் ஒரே நோக்கம், வெறுப்புக் குற்றங்களில் ஈடுபடுவதும் பயங்கரவாதத்தை அதிகரிப்பதும் மட்டுமே” என்று பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறினார்.