தேர்தல் இலவசங்கள் மாறுமா மக்கள் மனம்?

தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்குமோ தெரியாது – தேர்தலுக்கு முன்னதாகவே வாக்குறுதிகள் வந்து விழுகின்றன சலுகைகளாக. யார் எதைச் செய்வார்கள் செய்ய முடியும் என்பது வேறு விஷயம். ஆனால் அறிவிக்கிறார்கள். திமுக பதவிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவதாகச் சொல்லியிருக்கிறது. அஇஅதிமுக 1500 தருவதாகச் சொல்கிறது. நாங்கள் செய்வதைப் பார்த்து அவர்கள் செய்கிறார்கள் என்கிறது திமுக. அஇஅதிமுகவோ நாங்கள் ஏற்கெனவே நோட் புக்கில் எழுதி வைத்திருந்தோம், திமுக கள்ளத்தனமாகப் பார்த்து அதைக் காப்பி அடித்துவிட்டது என்கிறது பள்ளிக்கூட மாணவன்போல்.

யார்யாருக்கு எவ்வளவு கொடுக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, ஏன் கொடுக்க வேண்டும் என்பதே கேள்வி. சின்னக் குழந்தை யிடம் குச்சிமிட்டாயைக் கொடுத்துவிட்டு காதில் உள்ள கம்மலைத் திருடும் அயோக்கியர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? தன் காதுக் கம்மல் களவு போகிறது – அதன் மதிப்பு இவ்வளவு என்பது தெரியாத குழந்தைபோலவே வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தால், கம்மல் திருடும் அயோக்கியர்களும் அதிகமாகவே இருப்பார்கள். அதுதான் இப்போது நடக்கிறது.

இதில் வேடிக்கை என்னவெனில் ஒரே குழந்தையிடம் ஒருவர் வலது காதுக் கம்மலை திருடுகிறார், இன்னொருவர் இடது காதுக் கம்மலைத் திருடுகிறார். திருடுபவர்கள் வளர்கிறார்கள். பறிகொடுப்பவர்கள் குழந்தைகளாகவே இருந்துவிடுகிறார்கள். இது நம் ஜன நாயகத்தின் அவலம் அல்லவா? மக்களே அரசியல்வாதிகளிடம் இருந்து லஞ்சம் எதுவும் வாங்காதீர்கள். அது உங்கள் தலைக்கு நீங்களே வைத்துக்கொள்ளும் கொள்ளி என்பதை எடுத்துச்சொல்ல நம்மிடம் வலுவான சமூக இயக்கங்கள் இல்லை என்பதே வருத்தம் தருவதாக இருக்கிறது. ஓர் அரசியல்வாதி அதுவும் முதல்வராக இருக்கக்கூடிய ஒரு பெண்மணி ‘‘வாக்குகளுக்காக பாஜக பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள்.

ஆனால் எங்களுக்கே வாக்களியுங்கள்” என்கிறார். இப்படி வாக்காளர்களே நீங்கள் லஞ்சம் பெறலாம்; தடையில்லை என்று சொல்லும் ஒரு முதல்வரும் இருக்கிறார். இவர்மீது எந்தச் சட்டம் பாயும்? இலவசங்கள், சலுகைகள், சகாயங்கள் மக்களை முழுச் சோம்பேறிகளாக்குகின்றன என்பதே வருந்தத்தக்க சமூகப் பொருளாதார உண்மை. ‘ரூபாய்க்கு 3படி அரிசி தருவோம்’ என்று திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அண்ணாதுரை சொன்னார். அது சாத்தியம் இல்லை என்று கட்சிக்கே தெரிந்தபோது, ‘மூன்றுபடி லட்சியம்; ஒரு படி நிச்சயம்’ என்று வாசகத்தை மாற்றினார் அண்ணாதுரை.

மக்களுக்கு வாக்குறுதிகள் கிடைத்ததே ஒழிய, அந்த விலையில் அரிசி கிடைக்கவில்லை. அடுத்தடுத்து அவர்கள் அறிவித்த திட்டங்களும் அப்படித்தான். தொலைக்காட்சிப் பெட்டி தருவதாக திமுக சொன்னதும் அடித்தட்டு மக்களுக்கு அது ஒரு பெரிய வரம்போல இருந்தது. வாக்களித்தார்கள். மிகச்சிறிய அளவில் தொலைக்காட்சிப் பெட்டியை இலவசமாகப் பெற்றுக்கொண்டார்கள். பெட்டிதான் இலவசமே ஒழிய, அதில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு அவர்கள் குடும்பம் நடத்திய கேபிள் டிவிக்குக் கட்டணம் கட்ட வேண்டியிருந்தது.

ஆக, அந்தத் திட்டத்தின்படி அரசு செலவில் இலவசத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கிவிட்டு, கேபிள் டிவி வருமானத்தை, தன் குடும்பத்திற்கு ஒதுக்கிக்கொண்டது திமுக. இப்போது திமுக தன் தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்ற வகையில் ஏழு திட்டங்களை முன்வைத்துள்ளது. இந்த ஏழில் ஒன்று கூடப் புதிதல்ல, ஏழும் பாஜக அரசாகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது நடைமுறையில் இருக்கின்றன.

இவர்கள் புதிதாகச் செய்யவேண்டியது எதுவும் இல்லை. அது இவர்களுக்கே தெரியும். இருந்தாலும் மக்கள் வார்த்தை ஜாலத்தில் மயங்குவர் என்பதால் இதையும் திமுக சொல்கிறது. அஇஅதிமுகவும் இலவசங்களை அறிவிப்பதில் கொஞ்சமும் சலிக்கவில்லை. அதுவும் தன் பாட்டுக்கு ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்கிறது. நன்றிக்கடன் தவிர, வேறு எல்லாக் கடன்களையும் தீர்த்துவிடுவதாகச் சொல்லிவிட்டது. இரண்டு பெரிய திராவிட இயக்கக் கட்சிகளில் கூட்டணியாகச் சேர்ந்துகொள்ளும் தேசியக் கட்சிகளும், விரும்பியோ விரும்பாமலோ இலவசத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டியிருக்கிறது.

இலவசங்கள் எதுவும் இல்லை என்பதைச் சொல்லமுடியாமல் சில கட்சிகள் திணறுகின்றன. ஆட்சிக்கு வந்த பிறகும் இலவசங்களை அவர்களால் தவிர்க்கமுடியாது. ஆக, பதவி நாற்காலி இருக்கிறது என்பதே ‘இலவசம்’ என்ற பசையினால் ஒட்டப்பட்டிருப்பதால்தான். அப்படியெனில் மக்களை சோம்பேறிகளாக்குவதுதான் அரசாங்கத்தின் திட்டமா எனக் கேட்கலாம். சரியான கேள்வி, நாங்கள் மக்களை சோம்பேறிகளாக்கவில்லை என எந்தக் கட்சியும் சொல்லமுடியாது. அந்தக் கட்சி இவ்வளவு கொடுத்தால், அதைத் தாண்டி நான் கூடுதலாகக் கொடுப்பேன் எனும் நிர்பந்தத்தில் கட்சிகள் இருக்கின்றன. சிறு வியாபாரமோ, பெருவியாபாரமோ ஓரளவுக்காவது லாபம் இல்லாமல் எந்த வியாபாரியும் வியாபாரம் செய்ய மாட்டார் என்பதைப் புரிந்து கொண்டுள்ள சாதாரண மனிதர்கள், கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களை ஏனோ நம்பிவிடுகிறார்கள். கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்கிறார்கள்.

அதற்கு ஒரு சமாதானமும் சொல்கிறார்கள் இப்படி. “எப்படியோ ஆட்சிக்கு வந்தபிறகு கொள்ளையடிக்கப்போகிறார்கள். சென்ற முறை கொள்ளையடித்ததில் கொஞ்சம் கொடுக்கிறார்கள். நம்ம பணம்தானே வாங்கிக்கொண்டால் என்ன தப்பு?” இந்த வாக்காளர்களுக்கு ஏதாவது ஒரு சமூக அமைப்பு இந்த உத்தியின் பின்னால் உள்ள திருட்டுத்தனத்தை எடுத்துச் சொல்லியே ஆக வேண்டும். என்று ‘நாங்கள் லஞ்சம் வாங்கமாட்டோம், உங்களை லஞ்சம் வாங்க விடமாட்டோம்’ என வாக்காளர்கள் சொல்கிறார்களோ அன்றுதான் லஞ்சம் ஒழியும். இலவசங்கள் வேண்டாம் எனச் சொல்லும் பக்குவமும், சுயமரியாதையும் மக்களுக்கு இருக்க வேண்டும். அப்படியும் ஏதாவது சில பொருட்களைப் பெறும்போது இதை அரசாங்கம் கொடுக்கவில்லை, சகோதர மக்களிடம் இருந்து அரசாங்கம் வரியாகப் பெற்ற நிதியிலிருந்து தருகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

வாக்களிக்கும் மக்களின் மனோபாவத்தை முற்றிலுமாக மாற்றாவிட்டால் நாட்டில் லஞ்சத்தை ஒழிக்கமுடியாது. அரசியல்வாதிகள் கொள்ளையடித்துக் கொழிப்பதைத் தடுக்கவும் முடியாது. ஆனால், இப்படி நடக்காது முடியாது என்றே மக்கள் இருந்துவிட்டால், நல்லது எதுவும் நடக்காது. நல்லது எதையும் சொல்லவும் முடியாது.

-ஆர்.நடராஜன்