பதிவு செய்து அங்கீகரிக்கப்படாத 253 அரசியல் கட்சிகள் செயல்படாதவை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது: இவை தேர்தல் சின்னங்கள் உத்தரவு 1968ன் பயன்களை பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம், பீகார், டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகள் அடிப்படையில் இக்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கட்சிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம் அல்லது நோட்டீசுக்கு பதில் அளிக்காதது, 2014, 2019 ஆண்டுகளில் சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களில் எதிலும் போட்டியிடாத காரணங்களால் இவை செயல்படாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுச் சின்னம் கோரி, தேர்தலில் போட்டியிடாத 63 கட்சிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை ஏன் மேற்கொள்ளக் கூடாது என்பதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளை பதிவு சட்டத்தின்படி, ஒரு அரசியல் கட்சி தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் அது பதிவு செய்த கட்சிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்படும். இதன்படி, ஏற்கனவே 86 கட்சிகளின் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும், 853 கட்சிகள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி செயல்படாத கட்சிகள் என தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ளது. இதனால் இவை தேர்தல் சின்ன ஒதுக்கீட்டு பயனை பெற இயலாது. இதன் மீது மாறுபட்ட கருத்து இருக்கும் கட்சிகள், 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரி அல்லது தேர்தல் ஆணையத்தை, ஆண்டு வாரியாக தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள், நிதி பெற்றதற்கான அறிக்கை, செலவின அறிக்கை, வங்கிக் கணக்கு உட்பட நிதி பரிவர்த்தனைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டவர்கள் உட்பட தற்போதைய நிர்வாகிகள் ஆகிய விவரங்கள், உரிய ஆதாரங்களுடன் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.