தேர்தல் ஆணையம் அதிரடி

பாரத தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள ராஜிவ் குமார் வந்தது முதலே அதிரடி நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியுள்ளார். அவர் சட்ட அமைச்சகத்திடம் முதலில் கேட்ட விஷயமே ஆதாரையும் வாக்காளர் அடையாள அட்டையையும் இணைக்க சொல்லிதான். டிசம்பர் 2021ல் ராஜிவ் குமாரின் கோரிக்கை நாடாளுமன்றத்தில் குரல்வாக்கெடுப்பு மூலம் தேர்தல் திருத்த மசோதாவாக கொண்டுவரப்பட்டது. இது சாத்தியப்படாது எனகூறி எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்திருந்தன. போதிய விவாதங்கள் இல்லாமல் அவசரம் அவசரமாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என பொங்கி எழுந்தன. இந்நிலையில் மேலும் பல கோரிக்கைகளையும் சில அறிவுறுத்தல்களையும் இந்திய தேர்தல் ஆணையம் சட்ட அமைச்சகத்திடம் வழங்கியுள்ளது. அதில் ஒரு நபர் இரண்டு இடங்களில் போட்டியிடுவதை தவிர்க்க வேண்டும். 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடை வாங்கினால் மட்டுமே 24ஏ விண்ணப்பத்தை பதிவு செய்யவேண்டும் என்பதை இரண்டாயிரமாகக் குறைக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் பதிவுகளை அல்லது அங்கீகாரங்களை நீக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு கொடுக்கப்படவேண்டும். தேர்தல் கருத்துக்கணிப்புகளை தடைசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை நிறைவேற்றப்பட்டால் என்ன செய்வதென்று தெரியாமல் பல அரசியல் கட்சிகள் இப்போதே விழி பிதுங்கியுள்ளன.