பெரும்பான்மையை நிரூபித்தார் ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிராவில் கடந்த 2½ ஆண்டுகளாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் அந்த ஆட்சி கவிழ்ந்தது. அதனையடுத்து கடந்த புதன் கிழமை உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த நாள் அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றார். பா.ஜ.கவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றார். முன்னதாக, காங்கிரஸ் தலைவர் நானா படோலே ராஜினாமா செய்ததால், கடந்த 1½ ஆண்டுகளாக காலியாக உள்ள சபாநாயகர் பதவிக்கான தேர்தலை நடத்தவும், ஏக்நாத் ஷிண்டே அரசு பெரும்பான்மையை நிருபிக்கவும் 3, 4 ஆகிய தேதிகளில் 2 நாள் சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் பா.ஜ.க சார்பில் ராகுல் நர்வேக்கரும், சிவசேனா சார்பில் ராஜன் சால்வியும் போட்டியிட்டனர். இந்த பரபரப்பான அரசியல் சூழலில் புதிய சபாநாயகர் தேர்தலில் 271 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதில் பா.ஜ.கவின் ராகுல் நர்வேக்கர் 164 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து நேற்று ஏக்நாத் ஷிண்டே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டசபையில் நடைபெற்றது. இதில் பெரும்பான்மைக்கு 144 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஏக்நாத் ஷிண்டே 164 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். எதிரணியினருக்கு 99 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. கடைசி நேரத்தில் உத்தவ் தாக்கரே அணியில் இருந்த ஷ்யாம்சுந்தர் ஷிண்டே ஏக்நாத் ஷிண்டே ஆதரவளித்தார். 3 உறுப்பினர்கள் வாக்களிக்காமல் புறக்கணித்தனர்.