மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட லேசான மற்றும் மிதமான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில், ஸ்டெராய்டல் அழற்சி எதிர்ப்பு மருந்தான இன்டோமெதசின் மருந்துக்கு செயல்திறன் இருப்பதை சென்னை ஐ.ஐ.டி சோதனை வெளிப்படுத்தியுள்ளது. இன்டோமெதசின் குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய மருந்து என்பதால், லேசான கொரோனா நோய்த்தொற்றுக்கு புதிய சிகிச்சை முறையை உறுதி செய்யும் வகையில் இந்த ஆராய்ச்சிப் பணி அமைந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட முறைகள் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட இன்டோமெதசின், 1960களில் இருந்து பல்வேறு வகையான அழற்சி தொடர்பான சிகிச்சைக்கு பரவலாகப் பயன்படுத்தப்படும் மருந்தாகும். இத்தாலிய, அமெரிக்க விஞ்ஞானிகளால் அறிவியல் அடிப்படையில் ஆராய்ச்சி செய்யப்பட்ட போதிலும் நமது பாரத ஆராய்ச்சியாளர்கள்தான் இன்டோமெதசினின் செயல்திறனை மருத்துவ பரிசோதனை மூலம் முதன்முறையாக வெளிக்காட்டி உள்ளனர்.