டெல்லி மாடல் பள்ளிகளின் கல்வித்தரம்

டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு, டெல்லியில் “உலகத் தரம் வாய்ந்த கல்வி மாடல்” பற்றி பல கூற்றுக்கள் மற்றும் பல விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி சென்றிருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த பள்ளிகளில் ஒன்றை பார்வையிட்டார். சமீபத்தில் தமிழகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இணைந்து 26 டெல்லி மாடல் பள்ளிகள் திட்டத்தை சமீபத்தில் துவக்கி வைத்தனர். ஆனால் டெல்லி மாடல் பள்ளிகள் என்பது இவர்கள் கூறுவது போல உண்மையிலேயே சிறந்தவையா? இதுகுறித்த ஆய்வுகள் சொல்வதென்ன?

டெல்லியின் கல்வி மாதிரியின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிப்படுத்தும் சில விவரங்கள்:

புதிய பள்ளிகளும் வகுப்பறைகளும்

டெல்லியில் 500 புதிய பள்ளிகள் கட்டப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. இதை குறித்து கேள்வி கேட்பவர்களுக்கு, புதிய வகுப்பறைகளின் எண்ணிக்கையை கூறி திசை திருப்பி வந்தனர் ஆம் அத்மி கட்சியினர். ஆனால், அந்தக் கூற்று கூட தற்போது சர்ச்சையாகியுள்ளது.

2020ம் ஆண்டு டெல்லி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய விஜிலென்ஸ் கமிஷன் அறிக்கை, புதிய வகுப்பறைகள் கட்டுவதில் நிதி முறைகேடுகள் மற்றும் நடைமுறைக் குறைபாடுகள் பற்றிய அதிர்ச்சியூட்டும் விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது. டெண்டர் தொகையை விட ரூ. 326.25 கோடி அதிக செலவு செய்யப்பட்டுள்ளது. பல பள்ளிகளில் நடைபெற்ற பணிகளில் தர குறைபாடுகள் உள்ளன. கட்டுமானங்கள் முழுமையற்ற நிலையில் உள்ளது. 194 பள்ளிகளில் 6,133 வகுப்பறைகள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 141 பள்ளிகளில் 4,027 வகுப்பறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. அங்கு கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தேவையான அளவில் இல்லை. 4,027 வகுப்பறைகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. ஆனால் 7,137 வகுப்பறைகளுக்கு கட்டணம் செலுத்தப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.  500 பள்ளிகள் என வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட நிலையில் இதுவரை வெறும் 63 புதிய பள்ளிகள் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளன. இந்த விவகாரத்தில் டெல்லி துணை நிலை ஆளுநர் தலையிடும் வரை மாநில அரசு 2.5 ஆண்டுகள் இதனை மறைத்து வந்துள்ளது.

10வது 12வது தேர்வு முடிவுகள்

பொதுவாக பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளின் முடிவுகள் மாணவர்களின் கல்வித் திறன் பள்ளியின் கல்வி தரத்தை மதிப்பிடுவதற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்த இரண்டு அம்சங்களிலும், ஆம் ஆத்மி அரசின் செயல்திறன் அவர்கள் கூறுவது போல் மிக அற்புதமானதாக இல்லை. 2022ம் ஆண்டில், டெல்லியின் அரசுப் பள்ளிகளின் 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் 81.36 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது தேசிய தேர்ச்சி சதவீதமான 94.4 சதவீதத்திற்கு மிகவும் கீழே உள்ளது. தனியார் பள்ளிகள் தேசிய சராசரியை விட 95.99 சதவீத தேர்ச்சியுடன் சிறப்பாக செயல்பட்டுள்ளன என்பது வேறு விஷயம். இருப்பினும் டெல்லி அரசு பள்ளிகளில், 2014 முதல், 12ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம், 96.01 சதவீதமாக உள்ளது. இது தேசிய சராசரியை விட சற்றே அதிகமாக இருந்தாலும், 97.65 என்ற தனியார் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை விட குறைவுதான்.

உயர் இடைநிற்றல் விகிதங்கள்

பிரஜா அறக்கட்டளை வெளியிட்ட வெள்ளை அறிக்கை ஒன்றில், 2013 முதல் 17 வரையிலான கல்வியாண்டு தரவுகளில் சில:

2013ம் ஆண்டில் 9ம் வகுப்பில் சேர்ந்த 219,377 மாணவர்களில் 44 விழுக்காட்டினர் 2016ம் ஆண்டில் 12ம் வகுப்பை எட்டவில்லை. 26 விழுக்காட்டினர் 11ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பிற்கு செல்லவில்லை.  2015ம் கல்வியாண்டில் 43 விழுக்காட்டினர் 9ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பிற்கு செல்லவில்லை.

2015 முதல் 2016ம் கல்வியாண்டில் 7 முதல் 8 ஆம் வகுப்பு வரை 98.55 சதவீதமாக இருந்த மாணவர்களின் மாறுதல் விகிதம், 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களிடையே வெறும் 56.95 சதவீதமாகவே இருந்தது. 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களிடையே வெறும் 56.95 சதவீதமாகவே இருந்தது.

ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், கற்றல் நிலைகளைப் பொருட்படுத்தாமல் பார்த்தால், ஏறக்குறைய பாதி மாணவர்கள் இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

ஆல் பாஸ் கொள்கையால் 9ம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால், அவர்களின் கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதில் அரசு முயற்சி செய்யாததால், 10ம் வகுப்புக்கு மாறுவதில் பெரிய அளவில் தோல்வி ஏற்படுகிறது.

2018ம் ஆண்டில், 10ம் வகுப்பில் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களில் 42 சதவீதம் பேர், பள்ளி கல்வியில் இருந்தே முற்றிலும் வெளியேறியுள்ளனர். ஒரு சில மாணவர்கள் மட்டுமே மீண்டும் படித்து உயர்நிலைப் பள்ளியை அடைகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள், டெல்லி மாடல் பள்ளிகளின் உண்மை தன்மைகள் மிகைப்படுத்தப்பட்டு உள்ளதாகவே காட்டுகிறது. ஆனால், உண்மை நிலை இப்படியிருக்க, இதனை எல்லாம் மறைத்துவிட்டு, தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறேன் பேர்வழி என கூறிக்கொண்டு போலியான இந்த டெல்லி மாடலை தலையில் வைத்து கொண்டாடி வருகிறது நமது தமிழக அரசு.

(நன்றி: https://swarajyamag.com/politics/numbers-dont-lie-the-truth-about-aaps-education-model-in-delhi)