அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தற்போது நிர்வாகத் திறமையற்ற, தடுமாறும் தலைமையின் கீழ் நடைபெறும் ஆட்சியில் பல்வேறு விசித்திரங்கள் அரங்கேறி வருகின்றன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து, கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் பலாத்காரங்கள், போதைப் பொருட்கள் போன்றவை அதிகரித்து நிலைமை மோசமாகிவிட்டது. ஆளும் கட்சியினரின் அராஜகம் எல்லை மீறிப் போய்விட்டது. ‘தறிகெட்டு ஓடும் குதிரைகள் போல், அமைச்சர்கள் கட்டுப்பாடின்றி தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார்கள். திறமையற்ற முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்’ என்று நான் சொன்னபோது, அவருடைய தொண்டரடிப் பொடியாழ்வார்களுக்கு கோபம் கொப்பளித்தது. ஆனால், இப்போது அவரே, தன்னால் யாரையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று புலம்பியதை நாடே பார்த்தது. தமிழகக் காவல்துறைத் தலைவர், ‘ஆபரேஷன் மின்னல்’ என்று மாநிலம் முழுவதும் 72 மணி நேரத்தில் 3,905 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சொன்னார். இவர்களில் 705 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், 2,390 ரௌடிகளிடம் உறுதிமொழிப் பத்திரம் பெறப்பட்டுள்ளது பல ரௌடிகள் அண்டை மாநிலங்களுக்கு ஓடிவிட்டனர் என்று செய்திகள் தெரிவித்தன. ஆனால், சென்னையை அடுத்துள்ள ஊத்துக்கோட்டையில் உள்ள வடக்கு மண்டல ஐ.ஜியின் பூர்வீக வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களுக்கு ஓடிப்போன ரௌடிகளும், கொள்ளையர்களும் மீண்டும் எப்படி வந்தார்கள்? மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டி காவல் துறை, அதை விடுத்து, தி.மு.க அரசின் விளம்பரக் குழு தயாரித்துக் கொடுக்கும் திரைக் கதையை அரங்கேற்றும் வேலையை செய்வதை உடனடியாகக் கைவிட வேண்டும். இனியாவது சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் வைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.