கதிசக்தி எனப்படும் விரைவு சக்தி தொலைநோக்கு திட்டம் குறித்த பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், 21ம் நூற்றாண்டில் பாரதத்தின் வளர்ச்சிக்கு கதிசக்தியை இந்த ஆண்டின் பட்ஜெட் இலக்காக வைத்துள்ளது. அடிப்படை கட்டமைப்பு அடிப்படையிலான வளர்ச்சி என்ற வழிகாட்டல் நமது நாட்டின் பலத்தை அசாதாரணமாக அதிகரிக்க வழிவகுக்கும். 2013 – 14ம் ஆண்டில் மத்திய அரசின் நேரடி மூலதனச் செலவு இரண்டரை லட்சம் கோடியாக இருந்தது. இது 2022 – 23ம் ஆண்டில் ஏழரை லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் விரைவு சக்தி திட்டத்தில் இருந்து கட்டமைப்புக்குத் திட்டமிடுதல், அமலாக்கம், கண்காணிப்பு ஆகியவை புதிய பரிமாணத்தைப் பெறும். பிரதமரின் விரைவு சக்தி தேசியப் பெருந்திட்டத்தில் தற்போது 400க்கும் அதிகமான தரவுப் படிநிலைகள் உள்ளன. யூ.எல்..ஐபி மூலம் 6 அமைச்சகங்களின் 24 டிஜிட்டல் முறைகள் இதற்காக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இன்று பாரதத்தில் பொருள் போக்குவரத்து செலவு, ஜி.டி.பியில் 14 சதவீதம் வரை உள்ளது. இது மற்ற நாடுகளை விட அதிகம். கதி சக்தி திட்டம் பொருள் போக்குவரத்து இணையப்பக்கத்தில் தேசிய ஒற்றைச்சாளர முறையை உருவாக்கும். பொருள் போக்குவரத்திற்கான செலவைக் குறைக்க உதவும். நமது ஏற்றுமதிகளுக்கும் பேருதவி கிடைக்கும். இதனால் நமது சிறு குறு நடுத்தரத் தொழில்கள் உலகளவில் போட்டியிட முடியும். திட்டங்களுக்கு ஆகும் காலத்தையும், செலவையும் இது குறைக்கும். அடிப்படை கட்டமைப்பு உருவாக்கம், வளர்ச்சி, பயன்பாடு கட்டமைப்பு திட்டமிடலில் அரசு, தனியார் துறையின் சரியான பங்களிப்பை கதி சக்தி உறுதி செய்யும்’ என தெரிவித்தார்.