கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவலால் தேக்கடிக்கு சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்தது

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருவதால், தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறந்து விட்டது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்ததுடன் 4 பேருக்கு மேல் தொற்று பரவியது.

இதையடுத்து, தமிழக எல்லையான குமுளி, கம்பம்மெட்டு, போடி மெட்டு பகுதிகளிலும் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே தேனி மாவட்டத்தினுள் அனுமதிக்கப்படுகின்றன. நிபா வைரஸ் தொடர்பான இதுபோன்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கேரளா சுற்றுலா பயணத்தை பலரும் ரத்து செய்துள்ளனர்.

இதனால் கேரள எல்லையான குமுளி, தேக்கடியில் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துவிட்டது. இதேபோல் வாகமன், ராமக்கல் மெட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் இதேநிலை உள்ளது. இதனால் ஹோட்டல், தங்கும் விடுதி, ஜீப் சவாரி உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.