போதைப்பொருள் ஒழிப்பு தினம்

ஒவ்வொரு ஆண்டும் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் (ஜூன் 26) இன்று அனுசரிக்கப்படுகிறது. போதைப் பொருள் பயன்பாட்டால் உலகெங்கிலும் ஏற்படும் கலாச்சாரம் மற்றும் பொருளாதார சீரழிவுகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் பரப்ப இது ஐ.நா சபையால் முன்மொழியப்பட்டது..

‘தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவது போதைப்பொருள்  குறித்த உண்மைகளைப் பரிமாறிக் கொள்வது’ என்பது போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான 2021ம் ஆண்டின் கருப்பொருளாக உள்ளது.

உலகெங்கிலும் உள்ள தனிநபர்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரிடையே பொறுப்புணர்வுவை ஏற்படுத்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. போதைப்பொருளால் விளையும் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பள்ளிகள், கல்லூரிகள், பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் பேச்சு, நாடகம், போட்டிகள், கட்டுரை என பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

உலகம் முழுவதும் சிறுவர்கள், பெரியவர்கள் என 20 கோடிக்கும் அதிகமானோர், போதை பொருட்களுக்கு அடிமையாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மது, புகையிலை பொருட்களை உபயோகிப்பது சாதரமாண நிலையில், கஞ்சா, அபின், கோகைன், பிரவுன்சுகர் போன்றவை கரையான் புற்றுபோல் இளைஞர் சமூதயத்தை அழித்து வருகிறது. கட்டுக்கோப்பான உடல் வைத்திருக்க வேண்டியவர்கள் இளமையிலே நரம்பு தளர்ச்சி, உடல் சோர்ந்து போய் கிடக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது?

வேடிக்கை விளையாட்டாய் தொடங்கிய மது பழக்கம், பின்பு போதை பழக்கமாக மாறி விடுகிறது. பின் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றத்தால், போதை பொருள் உபயோகத்தின் அளவும் கூடிவிடும். உடல்நலமோ அடியோடு கெட்டுவிடும். மதுப்பழக்கமும் ஆரோக்கியமும் ஒன்றுக்கு ஒன்று இணக்கமில்லாதவை. போதைப்பழக்கம் மிக மோசமாக உடல்நிலையைப் பாதித்திருக்கும்.

வாழ்க்கை முறையில் மாற்றம், வாழ்க்கையில் உங்களை முன்னேற்றிக்கொள்ள உதவும் நடவடிக்கைகள், சரியான மருத்துவ ஆலோசனைகள், நல்ல சூழல் போன்றவை போதைப்பழக்கம் மறக்க உதவும் வழிமுறைகளில் முக்கியமானவை.

 

மணிவாசகன்