மதுரை மாவட்டம் மேலூர் அருகே காரைக்குடி சாலையில் அமைந்திருக்கும் நாவினிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய மழலையர் மற்றும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் மாணவ, மாணவிகள் உட்பட யாருமே பள்ளிக்குள் நுழைய முடியாத அளவுக்கு இப்பள்ளியின் நுழைவு வாயிலை மறித்து, சுமார் 4 அடி உயரத்துக்கு மழைநீர் கால்வாயை கட்டியுள்ளது மாவட்ட நிர்வாகம். இதனால், மாணவ, மாணவிகள் அந்த 4 அடி உயர கால்வாயை ஏறிக்குதித்து தான் பள்ளிக்குச் சென்றுவரும் அவலநிலை நிலவியது. இதையடுத்து, பள்ளி நுழைவு வாயில் முன்பு அமைக்கப்பட்டிருக்கும் அந்த மழைநீர் கால்வாயை அகற்றி விட்டு, கீழ்புறமாக அமைக்கும்படி ஊர்மக்கள் ஒன்றிணைந்து அந்த ஒப்பந்ததாரரிடம் கூறினர். ஆனால், மழைநீர் கால்வாயை அகற்றி மாற்றியமைக்க ஒப்பந்ததாரர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் ஆத்திரமடைந்த ஊர்பொதுமக்கள், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையறிந்து அங்கு வந்த அதிகாரிகள், பள்ளியின் பக்கவாட்டுச் சுவரை இடித்து பள்ளிகு சென்றுவர ஒரு தற்காலிக தீர்வை ஏற்படுத்தி கொடுத்தனர். தரையில் இருந்து 4 அடி உயரத்தில், அதுவும் பள்ளியின் நுழைவு வாயிலை மறித்து மழைநீர் கால்வாய் அமைத்த அரசின் புத்திசாலித்தனம் பொதுமக்கள் மத்தியில் கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. தி.மு.க ஆட்சியில் இது ஒன்றும் புதியது அல்ல. தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதன் ஒப்பந்ததாரர்கள், பல புதிய திராவிட மாடல் கட்டுமானங்களை அமைத்து சாதனை படைத்து வருகின்றனர். உதாரணமாக, சாலை நடுவில் இருக்கும் மின்கம்பங்களை அகற்றாமல் அப்படியே சாலை போடுவது, வெங்காயத்தாள் போல மெல்லிய சாலைகள் போடுவது, சாலையோரம் நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்தாமல் அவற்றின் மீதே சிமெண்ட் சாலை அமைப்பது, ஆழ்துளை கிணறுகளின் கைப்பம்புகள் மீது சாலை போடுவது, மின் கம்பத்தை உள்ளடக்கிய மழைநீர் கால்வாய் அமைக்கும் புதுமை திட்டம், இருவர் பயன்படுத்தும் ஒரே கழிப்பறை என பல புதுமை திட்டங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.