டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1886ம் ஆண்டு பிறந்த முத்துலட்சுமி ரெட்டி திண்ணைப் பள்ளியில் படித்தார். அவருடைய தாயார் சந்திரம்மாள் நோயால் சிரமப்பட்டு இறந்தார். இதனை நேரில் பார்த்ததால், தான் எப்படியும் மருத்துவர் ஆக வேண்டும். நம்முடைய தாயை போன்று நோயால் அவதிப்படும் ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். சென்னை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த இவர், படிப்பில் சிறந்து விளங்கினார். பல்வேறு சான்றிதழ்களையும், தங்க பதக்கங்களையும் பெற்றார்.

கர்னல் ஜிப்போர்டு என்ற அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியர், தன்னுடைய வகுப்பில் மாணவிகளை அமர அனுமதிப்பது இல்லை. ஆனால் முத்துலட்சுமி தங்கப்பதக்கம் பெற்ற பிறகு, மனம் மாறிய அவர், தனது வகுப்பில் பெண்கள் உட்காரலாம் என்று கூறினார். முத்துலட்சுமி, பாரதத்தின் முதல் பெண் மருத்துவராக பட்டம் பெற்றபோது, ‘சென்னை மருத்துவக்கல்லூரி வரலாற்றில் இது பொன்னான நாள்’ என்று எழுதினார் கர்னல் ஜிப்போர்டு.

பின்னர் எழும்பூர் மருத்துவமனையில் முதல் பெண் மருத்துவராக பணியில் சேர்ந்தார். லண்டனில் உள்ள செல்சியா மருத்துவமனையில் தாய்சேய் மருத்துவம் மற்றும் புற்றுநோய் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்தார்.

1926ல் பிரான்சிலும், 1933ல் அமெரிக்காவிலும் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாடுகளில் பாரத பிரதிநிதியாக கலந்துகொண்டார். சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயராக பணியாற்றி, அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி இவர்தான். 1925ல் சட்டசபை துணைத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது ஐந்தாண்டு பதவிக்காலத்தில் தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச்சட்டம், பெண்களுக்கான சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாக தடைச்சட்டம் போன்றவை கொண்டுவர பாடுபட்டார்.

அனாதைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்காக சென்னை அடையாறில் அவ்வை இல்லத்தை தொடங்கினார். தென்னிந்தியாவில் முதல் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைத்த பெருமை இவரையே சாரும். 1956ல் மத்திய அரசு இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்தது. 1968-ம் ஆண்டு தனது 81-வது வயதில் காலமானார்.

பாரதத்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்தநாள் இன்று