டாக்டர் அம்பேத்கர் ஆய்வு இருக்கைகள்

டாக்டர் அம்பேத்கருக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக, மத்திய அரசின் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை, பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுடன் இணைந்து டாக்டர் அம்பேத்கர் ஆய்வு இருக்கைகளை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் அம்பேத்கரின் சிந்தனைகள் மற்றும் கொள்கைகளை ஆய்வு செய்வதுடன் பொருளாதாரம், அரசியல் அறிவியல், சமயம், தத்துவம், அரசியல் சட்டம், கல்வி, மானுடவியல், சமூகவியல், சமூகப்பணி, சட்டம், மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆய்வுகள் மேம்படும். டாக்டர் அம்பேத்கர் தொடர்பான விஷயங்கள் மட்டுமின்றி சமூக பொருளாதாரம், கலாச்சாரம், பட்டியலின பழங்குடியினர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்தும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நலிவடைந்தோர் பற்றிய ஆய்வுகளையும் மேற்கொள்வது இந்த இருக்கைகளின் நோக்கமாக இருக்கும். இந்த ஆய்வு இருக்கைகளுக்கான மானிய உதவித் தொகை தற்போதுள்ள ரூ. 35 லட்சம் என்பதிலிருந்து ரூ. 75 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்த இருக்கைகளை உருவாக்குவதற்கு ஒரு முறை மானியமாக ஒவ்வொரு இருக்கைக்கும் ரூ. 10 லட்சம் அளிக்கப்படும்.