கெஜ்ரிவாலை ஆதரிக்க வேண்டாம்

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவினரால் (சி.பி.ஐ) விசாரிக்கப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிப்பதோ அல்லது அனுதாபம் காட்டுவதோ வேண்டாம், அவ்வாறு செய்வது காங்கிரஸ் தொண்டர்களை குழப்பும், பா.ஜ.கவுக்கே பலன் அளிக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜய் மாக்கன் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், “கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் கெஜ்ரிவால் மற்றும் அவரது கூட்டாளிகள் எந்த அனுதாபமும் ஆதரவையும் காட்டக்கூடாது என்று நான் நம்புகிறேன். கெஜ்ரிவால் ஊழல் வழிகளில் சம்பாதித்த பணம் பஞ்சாப், கோவா, குஜராத், ஹிமாச்சல் பிரதேஷ், உத்தரகாண்ட் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இந்திய தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களும் அங்கீகரிப்பது முக்கியம். மதுபானம் மற்றும் கீ கேட் ஊழல் மீதான குற்றச்சாட்டுகள் முழுமையாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். முடிவாக, திறமையான வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த செயற்குழு உறுப்பினர்கள், இப்போது வழிநடத்தும் குழு உறுப்பினர்கள், தயவுசெய்து நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் அல்லது அவரது அரசை பிரதிநிதித்துவப்படுத்துவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். யாரையும் பிரதிநிதித்துவப்படுத்துவது அவர்களின் தொழில்முறை என்ற எல்லைக்குள் இருந்தாலும் கெஜ்ரிவாலின் அரசு மற்றும் அவரது கூட்டாளிகளுக்காக அவ்வாறு செய்வது நமது தொண்டர்களுக்கு தவறான செய்தியை அனுப்புகிறது, அவர்களை குழப்புகிறது. இது இறுதியில் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் பா.ஜ.க பயனளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கெஜ்ரிவாலை அழைத்து அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேசியத் தேர்தலில் பா.ஜ.கவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின் அவசியம் குறித்து விவாதித்த ஒரு நாள் கழித்து அஜய் மக்கானின் இந்த கருத்து வந்துள்ளது. முன்னதாக, கடந்த மாதம் முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சி.பி.ஐ சம்மன் அனுப்பியபோது காங்கிரஸ் தலைவர்கள் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2015ம் ஆண்டு டெல்லி காங்கிரஸ் தலைவராக இருந்த அஜய் மக்கான், அந்த ஆண்டு டெல்லி தேர்தலின்போது கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, தனது கட்சிக்கு அளித்த கசப்பான தோல்வியை இன்னும் மறக்கவில்லை. டெல்லியில் மூன்று முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, அந்த ஆண்டு டெல்லியில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதன் பிறகு இன்றுவரை டெல்லியில் ஆட்சியை அதனால் கைப்பற்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.