அரசியலை கலக்க வேண்டாம்

மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா, பி.டி.உஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் பிரதமர் மோடி குறித்த புத்தகத்தில் அம்பேத்கரையும் பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு புகழ்ந்து இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய முன்னுரை பல்வேறு விமர்சனங்களை பெற்றிருந்தது. வழக்கம்போல திராவிட சிகாமணிகள் பொங்கினர். இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை,  “அம்பேத்கர் வாழ்க்கை குறிப்பைப் பற்றிய ஒரு புத்தகத்தின் முன்னுரையில், அம்பேத்கரின் வாழ்வியல் சிந்தாந்தங்களை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி செய்து கொண்டிருப்பதாக ஒரு வார்த்தையை இளையராஜா கூறினார். இது பாரதம் முழுவதுமுள்ள பல பெரிய மனிதர்கள் கூறிய கருத்துதான். இது புதிது கிடையாது. இளையராஜா, கோவையில் தனது பிறந்தநாள் விழாவில், தமிழக அரசு நன்றாக பணி செய்வதாககூடப் பேசியிருந்தார். அது எல்லாமே அவருடைய தனிப்பட்ட கருத்தாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். இளையராஜா ஸ்டாலின் குறித்து பேசினாலும் பிரதமர் மோடி குறித்து கருத்து கூறினாலும் அவை அவருடைய தனிப்பட்ட கருத்துகள். இதில் அரசியல் கலக்க வேண்டிய அவசியம் கிடையாது. தமிழக அரசியல் கட்சியினர், இளையராஜாவின் தனித்திறமையால் கிடைத்திருக்கக்கூடிய ஒரு அங்கீகாரத்தைக்கூட, கொச்சைப்படுத்த முயற்சிக்கிறார்கள், இது மிகவும் வேதனையான ஒன்று. ஜாதி, மதத்திற்குள் அடைக்கக்கூடாத ஒரு மாமனிதன் இளையராஜா” என்று தெரிவித்தார்.