மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய, உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘தேசம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்துவிட்டன. சமீபத்தில், குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள ‘முகல் கார்டன்’ பூங்கா ‘அம்ரித் உத்யன்’ என பெயர் மாற்றப்பட்டது. ஆனால் நம் நாட்டில் உள்ள நம் நாட்டின் பல தொன்மை வாய்ந்த, கலாசாரம் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களும், வழிபாட்டு தலங்களும் இங்கு படையெடுத்து வந்த வெளிநாட்டவர்களால் பெயர் மாற்றப்பட்டுள்ளன. வெளிநாட்டு ஊடுருவல்காரர்கள், அவர்களுடைய வேலைக்காரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களிலேயே இன்னமும் அழைக்கப்படுகின்றன. பாரதம் பழைய காலத்தின் கைதியாக இருக்க முடியாது. இது நமது இறையாண்மை மற்றும் அரசியல் சாசனம் வழங்கியுள்ள பல உரிமைகளுக்கு எதிரானது ஆகும். எனவே, வெளிநாட்டு ஊடுருவல்காரர்களால் மாற்றப்பட்ட பெயர்களை அதன் அசல் பெயரில் மாற்றுவதற்காக ஒரு ஆணையத்தை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். பல இடங்களின் அசல் பெயர்களை கண்டறிந்து வெளியிடுமாறு தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘பாரதம் ஒரு மதச்சார்பற்ற நாடு, நீதிமன்றமும் மதச்சார்பற்ற அமைப்பு. அரசியல் சாசனத்தின் அனைத்து பிரிவுகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. ஹிந்து என்பது மதம் அல்ல. அது வாழ்வியல் நெறிமுறை. அதனால்தான் நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்கிறோம். கடந்த கால வரலாறுகளை தோண்டாதீர்கள். நாட்டின் ஒற்றுமை, அமைதியை சீர்குலைக்கக் கூடாது. பழைய பிரச்சினைகளை எழுப்பி நாட்டை கொதிநிலையில் ஆழ்த்தும். நம் நாட்டின் பழைய வரலாறு, இன்றைய மற்றும் எதிர்கால தலைமுறைகளை பாதிக்கக்கூடாது. மக்களை பிரித்து ஆட்சி செய்வது பிரிட்டிஷாரின் கொள்கை. அந்த நிலை மீண்டும் உருவாகக் கூடாது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்’ என உத்தரவிட்டனர்.