ஹரியானா சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுவின் (HSGMC) தலைவரும் சீக்கிய மதபோதகருமான பல்ஜித் சிங் தடுவால், சீக்கிய இளைஞர்கள், காலிஸ்தான் என்ற பிரிவினைவாத அமைப்பு காட்டும் டாலர் கனவுகளில் இருந்து விலகி இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ செய்தியில், “காலிஸ்தான் பிரிவினை வாதிகளால் பல சீக்கிய குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. அவர்களின் இளம் மகன்களுக்கு, காலிஸ்தான் கொடிகளை ஏற்றுவதற்கும் அதன் ஓவியங்களை சுவற்றில் வரைவதற்கும் ஈடாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு சில லட்சங்கள், அல்லது ஆயிரங்கள் டாலர்கள் வரை பணம் கொடுப்பதாகவும் வேலைவாய்ப்பு தருவதாகவும் போலி வாக்குறுதி அளிக்கின்றன. சில சீக்கிய இளைஞர்களும் இந்த போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் கூட கிடைப்பதில்லை. இதன் காரணமாக பல இளைஞர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இது வருந்தத்தக்கது. இந்த சட்டவிரோத வேலையைச் செய்தவர்களுக்கு காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு ஊதியம் கூட வழங்காமல் ஏமாற்றிவிட்டன. இதனால், சமீபத்தில் பலர் என்னை அணுகி இதற்கு நிவாரணம் கேட்கின்றனர். வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றி இந்த பிரிவினைவாத வெளிநாட்டு அமைப்புகளுக்கு அவ்வளவு அக்கறை இருந்தால், அவர்கள் இங்கு வந்து தொழிற்சாலைகளைத் திறக்க வேண்டும், பஞ்சாப் இளைஞர்களுக்கு உதவும் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். பல்ஜித் சிங் தடுவால் இதற்கு முன்னர், பியாந்த் சிங் கொலைக் குற்றவாளியான ஜக்தார் ஹவாரா உள்ளிட்ட சில கடுமையான போக்குக்கொண்ட தலைவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர். பின்னர் அதிலிருந்து விலகியுள்ள அவரின் இந்த அனுபவம் மிக்க வேண்டுகோள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.