சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அன்னையர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, “குழந்தைகள், குடும்பத்தினர் வளர்ச்சிக்காக உழைப்பதை அன்னையர் மகிழ்ச்சியாகவே கருதுகின்றனர். மனிதனிடம் உள்ள அன்பு குணம் தாய் மூலம் மட்டுமே வருகிறது. நாம் எங்கு இருந்தாலும் தாயை கைவிடக் கூடாது. வளர்ந்து வரும் உலகில் தற்போதைய இளைஞர்கள் பெற்றோர்களை விட்டு விட்டு வேறு பகுதிக் செல்கின்றனர் “என தெரிவித்தார். மேலும் தனது டுவிட்டரில் அன்னையர் தின வாழ்த்துகளை பதிவிட்ட ஆளுநர் “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்”என்ற குறள் மொழிக்கேற்ப தன் நலனை விட பிள்ளைகள் முன்னேற்றத்துக்காக எத்தகைய தியாகத்தையும் செய்வதே தாய்மை குணம். அன்பில் சமரசமில்லாதது தாய்மை பண்பு.ஒரு நல்ல குடிமகனை உருவாக்கிய தாய் பெருமிதம் கொள்வதுபோல், நல்ல தேசமாக உலகில் முன்னிலை பெற்று வரும் நம் பாரதத்தை கண்டு பாரத மாதா பெருமிதம் கொள்கிறார். உலகில் தாய்மைக்கு மதிப்பு கொடுக்கும் நாடு நமது பாரத நாடு, பூமா தேவி பாரத மாதா என பூமிக்கும், நம் தேசத்துக்கும் அன்னையையே முன்னிலைப்படுத்துகிறோம்.அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.