தடுப்பூசியை தடுக்கிறதா மதம்?

கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே வழி என்று உலக நாடுகள் அனைத்தும் நம்புகிறது. மத்திய, மாநில அரசுகளும் தடுப்பூசி போடுவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், கேரளாவில் 5 ஆயிரம் ஆசிரியர்கள், தங்கள் மதத்தை காரணம் காட்டி கொரோனா தடுப்பூசி போட மறுத்து வருகின்றனர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி, ‘தடுப்பூசி போட மறுக்கும் ஆசிரியர்களால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படக்கூடும். சில ஆசிரியர்கள் தடுப்பூசி போடாமல் பள்ளிக்கு வருகிறார்கள். இதை நாங்கள் ஊக்குவிக்கவில்லை. இதனால் 47 லட்சம் மாணவர்கள், மக்களின் நலன் கேள்விக்குறியாகி உள்ளது. மதத்தை காரணம் காட்டி தடுப்பூசி போட மறுப்பது ஏற்கத்தக்கதல்ல’ என்று தெரிவித்தார். ஆனால் அவர், அந்த ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவிக்கவில்லை.