இந்தியாவை சுற்றி வளைத்துப்போட நினைக்கும் சீனா..!?

உலகமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், சீனா தனது ஆக்டோபஸ் கரங்களால், அனைத்து சிறிய நாடுகளையும், வளைத்துப்போட முயற்சி செய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக இந்தியாவை சுற்றி உள்ள அண்டை நாடுகளில், சீனா, தனது இரும்பு கரத்தை நீட்டி தன்னுடைய கைப்பாவையாக மாற்ற முயற்சி செய்து வருகின்றது. அதன் ஒரு அங்கமாக, இலங்கையில் பெருமளவு முதலீடு செய்து தன் வசப்படுத்த முயற்சி செய்து வருகின்றது. அதன் மூலம், இந்தியாவிற்கு தொடர்ந்து நெருக்கடி தர திட்டமிட்டு உள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.

இலங்கை :

மொத்த நிலப்பரப்பு – 65,610 சதுர கிலோமீட்டர் (square kilo metres) ஜூன் 11, 2021 நிலவரப்படி,

இலங்கையின் மொத்த மக்கள் தொகை – 2,14,92,690.

சராசரியாக ஒரு நாளில் 887 நபர்களின் பிறப்பும், 406 நபர்களின் மரணமும் நிகழ்கின்றன.

புத்த மதத்தினர்- 70.2%, இந்து – 12.6%, இஸ்லாமியர்கள் – 9.7%, ரோமன்கேத்தோலிக் – 6.1%, இதர கிறித்தவர்கள் – 1.3%…

அம்பாந்தோட்டை துறைமுகம் (Hambantota Port) :

அம்பாந்தோட்டை துறைமுகம், 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு, 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதி, அன்றைய இலங்கை அதிபர் மஹிந்தராஜபக்ஷ அவர்களால் திறக்கப்பட்டு, தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. கொழும்பு துறைமுகத்திற்கு அடுத்ததாக, இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய துறைமுகமாக இந்த துறைமுகம் உள்ளது.

2007 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில், மஹிந்தராஜபக்ஷ தலைமையிலான இலங்கை அரசு, சீனாவிடம் இருந்து, 1.263 பில்லியன் டாலர் அளவிற்கு பணத்தை, முதலீடாகவும் கடனாகவும் பெற்றது. அதில், பெரும்பாலான முதலீடு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செய்யப்பட்டது.

“இலங்கையின் மத்திய வங்கி” 2015 மற்றும் 2016  வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையில் உள்ள துறைமுகத்திலேயே மிகவும் எதிர்மறையான வளர்ச்சியை (Negative Growth) ‘அம்பாந்தோட்டை துறைமுகம்’ மட்டும் தான் கொண்டு இருக்கின்றது என தெரிவித்தது.

கொழும்பு துறைமுகம் மேம்படுத்தப்பட்டதால், அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு முக்கியத்துவம் இருக்காது” என ‘ஆசிய கடல் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு” (The Asia Maritime Transparency Initiative) தெரிவித்து இருந்தது.

கப்பல் வருகை குறைந்ததாலும், அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருமானம் மிகவும் குறைந்ததாலும், இந்தியா உட்பட பலநாடுகள், அந்தத் துறைமுகத்தில், முதலீடு செய்வதற்கு தயக்கம் காட்டிவந்தன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, அம்பாந்தோட்டை துறைமுகத்தை கையகப்படுத்த சீனா முயற்சி செய்தது.

2017 ஆம் ஆண்டு, அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80% பங்குகளை சீனா வணிகத் துறைமுகம் (China Merchant’s Port) நிறுவனத்திற்கு, 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கியது, இலங்கை. இதனுடன் துறைமுகம் சுற்றியுள்ள 1,235 ஏக்கர் நிலங்களையும் சேர்த்து குத்தகைக்கு வழங்கியது, இலங்கை. மீதமுள்ள 20 % பங்குகளை, இலங்கை துறைமுகம் (Sri Lanka Port’s Authority) தன் வசம் வைத்துக்கொண்டது.

முதலில், 1.12 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு, சீனா வணிகத் துறைமுகம் (China Merchant’s Port – CM Port) அம்பாந்தோட்டை துறைமுகத்தில் முதலீடு செய்தது. பின்னர், மேற்கொண்டு உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்க, 700 முதல் 800 மில்லியன் அமெரிக்க டாலர்களை, கூடுதலாக செலவு செய்தது.

சரக்குகளை கையாளும் நடைமுறையை “Roll On Roll Off” என்று அழைப்பர். ஒரு பொருள், கப்பலில் இருந்து எவ்வாறு ஏற்றப்படுகின்றது, கப்பலில் இருந்து எவ்வாறு இறக்கப்படுகின்றது என்பதைக் குறிக்கும், ஒரு தொழில்நுட்ப சொல்லாகும். கிரேன் மூலமாக பொருட்களை வைப்பதற்கு பதிலாக, எளிதாக உருண்டு பொருட்கள் வெளியே வரும் வகையில், கப்பலில் பொருட்களை ஏற்றும் வகையில் இயங்கக்கூடிய தொழில்நுட்பத்தின் பெயர் அது.

இந்த புதிய தொழில்நுட்பத்தின் காரணமாக துறைமுகம் வளர்ச்சி அதிகமானது.சுமார் 136 சதவீதம் அளவிற்கு, கப்பல்களை கூடுதலாக கையாளும் திறமையை பெற்றது. இதன்மூலம், ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் சிறந்த ஒரு துறைமுகமாக, அம்பாந்தோட்டை துறைமுகம் கருதப்பட்டது.

ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் இருந்து, அம்பாந்தோட்டை துறைமுகம் அருகில் உள்ளது. சீனாவில் உள்ள சென்ஷென்னில் இருந்து துறைமுகம் சென்று சேர 11 நாட்களும், சிங்கப்பூரில் இருந்து சென்றுசேர மூன்று நாட்களும், துபாயில் இருந்து சென்று சேர ஐந்து நாட்களும், கென்யாவில் இருந்து சென்றுசேர ஆறு நாட்களும், தென்னாப்பிரிக்காவில் இருந்து துறைமுகம் சென்றுசேர ஒன்பது நாட்களும் என பயண நேரம் வெகுவாக குறைந்தது.

துறைமுகம் அருகே சீனாவின் ஷான்டோங்ஹேவுவா நிறுவனம் (Shandong Haohua Tyre Co. Limited), 9 மில்லியன் டாலர் மதிப்புள்ளடயர் தொழிற்சாலையை ஆரம்பிக்கிறது. மேலும் பல நிறுவனங்களை, துறைமுகம் அருகே சீனா ஆரம்பித்து செயல்படுத்தி வருகின்றது.

அம்பாந்தோட்டை துறைமுகமானது, 4 ஆயிரத்து 500 எண்ணெய் கப்பல்கள் உட்பட மொத்தம் 36,000 கப்பல்களை கையாளும் வசதி கொண்டது.  பயண நேரம் குறைவதால், எரிபொருள் தேவையும் குறையும். இதன்மூலமாக, பொருளாதாரமும் மேம்படும்.

சீன மொழி உள்ளே..தமிழ் மொழி வெளியே

சீனாவின் ஆதிக்கம் அதிகம் ஆனவுடன் தமிழ்மொழி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. சீன மொழியான மாண்டரின் பல இடங்களில் புகுத்தப்பட்டுவருகின்றது.

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், இது சம்பந்தமாக ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், “தமிழர்கள் சீனாவிற்குச் சென்று, தற்காப்பு கலையை ஐந்தாம் நூற்றாண்டிலேயே, கற்றுக் கொடுத்தனர். ஆனால், தற்போது சீனாவினர் தமிழ்மொழியை புறந்தள்ளி, தங்களுடைய மொழியான மாண்டிரினைப் புகுத்துவது வேதனையாக இருக்கின்றது”, என ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

அறிவிப்பு பலகைகளிலும், தமிழ்மொழியை புறக்கணித்து,சீன மொழியான மாண்டிரினே, பல இடங்களில் காட்சி அளிக்கின்றது.

இலங்கையில் திட்டமிட்டு அழிக்கப்படும் இந்து கோவில்கள்:

2009 இறுதிப் போருக்கு பின்னர், நிறைய இந்துக்கோவில்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவதாக, குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து கொண்டே வருகின்றது. ஜனவரி 18, 2021 அன்று, முல்லைத் தீவில் உள்ள குறுந்தூர் மலையில் சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டு, அங்கு, புத்தர் சிலைகள் நிறுவப்பட்டது. இதன்மூலமாக தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில், சிங்களர்களை குடியமர்த்த திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் உலாவருகின்றன.

இந்தியப்பெருங்கடலில் (Indian Ocean) சீனாதன்னுடையஆதிக்கத்தைஅதிகரிக்கும்நோக்கில், பலகோடி முதலீடுகளை செய்து வருகிறது. இதனை, இந்தியா உட்பட பல நாடுகள், தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் இலங்கையில், சீனாவின் முதலீட்டை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வருகிறது. அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றியும் ஆராய்ந்து வருகின்றனர். இந்தியா கடலோரத்திற்கு மிக அருகில், 50 கிலோமீட்டர் தொலைவில், நைநாத்தீவு, நெடுந்தீவு, அனலைத்தீவு என்ற  3 தீவுகளில், சீனாவின் எரிவாயு நிலையம் அமைய இருக்கின்றது.

இந்தியாவை சுற்றி வளைத்துவிட,  எல்லா பகுதியிலும், தன்னுடைய பலத்தை சீனா அதிகரித்துக் கொண்டே வருகின்றது. பாகிஸ்தானில் ஏராளமான முதலீடுகளும், மாலத்தீவில் ஏராளமான முதலீடுகளும், அதுபோல இலங்கையிலும் ஏராளமாக முதலீடுகளை சீனா செய்து கொண்டு வருகின்றது. இதன்மூலம், இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்க, சீனாவினர் திட்டமிட்டு உள்ளனர்.

இதனை உணர்ந்து கொண்ட மத்தியஅரசு, பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அண்மையில், லட்சத்தீவில், நமது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், அங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக, நிறைய நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை, இந்திய அரசு மேற்கொண்டு வருவதை, இங்கு உள்ள, அரசியல் கட்சிகளும், சமூக நல ஆர்வலர் என சொல்லிக் கொள்பவர்களும், தொடர்ந்து எதிர்த்துக் கொண்டே வருகின்றனர்.

சென்னை அருகே பழவேற்காடு அருகாமையில் விஸ்தரிக்கப்பட இருந்த காட்டுப்பள்ளி துறைமுகத்தை, போலியான காரணத்தைக் கூறி, முட்டுக்கட்டை போட, சிலர் முயற்சி செய்து வருகின்றனர்.

இங்கு உள்ள துறைமுகத்தை, பலப்படுத்தினாலே, பல கப்பல்கள் இங்கு வர வசதியாக இருக்கும். அதனால், இங்கும் தொழில் வளரும்.பொருளாதாரமும் மேம்படும். நமக்கும் அண்டை நாட்டின் மீது ஒரு கண்வைக்க, அது வழி வகுக்கும். அதனை அறிந்து கொண்டு செயல்படும் மத்திய அரசை, சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தேச நலன் சார்ந்து யோசிக்கும் மத்திய அரசை விமர்சிக்காமல், நமது நாட்டு நலன் கருதி, மத்திய அரசின் பல நல்ல திட்டங்களுக்கு, தோளோடு தோள் கொடுத்து, பலம் சேர்க்க வேண்டிய நேரம் இது.

“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்

நற்றவவானினும் நனி சிறந்தனவே”

-பாரதியார்

.ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

மூலம் :

https://worldpopulationreview.com/countries/sri-lanka-population

https://www.indiatoday.in/world/story/revival-hambantota-port-sri-lanka-strengthen-china-position-indian-ocean-1781171-2021-03-19

https://www.republicworld.com/world-news/rest-of-the-world-news/sri-lanka-mandarin-chinese-replaces-tamil-signage-incident-evokes-fear-among-locals.html

https://www.einnews.com/pr_news/534818084/hindu-temple-destroyed-and-buddhist-temple-installed-in-it-s-place-in-sri-lanka-tgte-calls-for-action