கோயில் விழாவுக்கு அனுமதி தேவையா?

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வலையபட்டியை சேர்ந்த சீனி, மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘எங்கள் கிராமத்தில் உள்ள ராஜகாளி அம்மன் கோயில், பட்டத்து அரசி அம்மன் கோயில் ஆகியவற்றின் திருவிழாவை இந்த ஆண்டு 19, 20ம் தேதிகளில் நடத்த திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகிறோம். திருவிழாவுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும்படி காவல்துறையில் மனு அளித்துள்ளோம். ஆனால், இதுவரை அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. திருவிழா நடத்த உரிய அனுமதியை அளிக்க காவல்துரைக்கு உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘கிராமங்களில் பழமையான கோயில்களில் திருவிழா நடத்துவதற்கு காவல்துறையில் அனுமதி பெற வேண்டும் என்று சட்ட விதிமுறைகள் உள்ளதா என்ற கேள்விக்கு, இல்லை என்பதுதான் பதிலாக கிடைத்துள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் சில அடிப்படை உரிமைகளை வழங்குகிறது. அனைத்து குடிமக்களும் அமைதியாகவும் ஆயுதம் ஏதுமின்றி ஒன்றுகூடுவதற்கு உரிமை உண்டு. அதேபோல விதிகளுக்கு உட்பட்டு, சுதந்திரமாக மதத்தை கடைப்பிடிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு சம உரிமை உண்டு. இதுபோன்ற ஒரு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “பல நூற்றாண்டுகளாக உள்ள பழமையான பழக்கவழக்கங்கள், மத நடைமுறைகளை புறக்கணிக்க முடியாது. அவை உள்ளூர் மக்களின் உணர்வுடன் கலந்துள்ளன” என்று தெரிவித்துள்ளது. எனவே கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக போலீசாரிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் நிலை இருந்தாலோ, ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவது போன்றவற்றிற்கு மட்டும் அனுமதி பெற்றால் போதும். இதில் கிராம மக்கள் அனைவரும் திருவிழா நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருகின்றனர். எனவே சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இல்லை. திருவிழா நடத்த அனுமதி வழங்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.