வன்முறை தூண்டுதலுக்கு பலியாக வேண்டாம்

ஜும்மா தொழுகைக்குப் பிறகு மசூதிகளில் இருந்து வெளியே வரும் கூட்டத்தால் நாட்டில் ஆங்காங்கு நிகழ்த்தப்படும் வன்முறைகள், கல்லெறிதல், தீ வைப்பு, போன்ற சம்பவங்களை வி.ஹெச்.பி வன்மையாகக் கண்டித்துள்ளது. வி.ஹெச்.பி அமைப்பின் மத்திய செயல் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான அலோக் குமார் கூறுகையில், ‘முஸ்லிம் மக்களிடம் கலந்துள்ள ஜிஹாதிகள், சமூகத்தை வன்முறைப் பாதைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். இது சமூகத்திற்கோ அல்லது நாட்டுக்கோ நல்லது அல்ல. இது, நாட்டின் அமைதி, அனைவரையும் உள்ளடக்கிய அரசின் நெறிமுறைகளை கெடுக்க முயற்சி. பாரதம் அதன் அரசியலமைப்பு சட்டத்தின்படியே செயல்படுகிறது; ஷரியா குற்றவியல் சட்டத்தின்படி அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் ஈடுபடுபவர்கள், தாங்கள் நீதிபதிகளாகவோ அல்லது சட்டத்தை நிறைவேற்றுபவர்களாகவோ இருக்க முடியாது என்பதையும் உணர வேண்டும். ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர், கோயில்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் மீதான தாக்குதல்கள் சட்டத்தின்படியான ஆட்சிக்கு சவாலாக உள்ளது. இந்த நாசவேலைக்கு எதிராக சட்ட அமலாக்க அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன; என்றாலும் கலவரக்காரர்களுக்கு எதிராக அரசு எந்தவிதமான மெத்தனமும் காட்டக்கூடாது. வன்முறை கூட்டங்கள் தோன்றிய மதவழிபாட்டுத் தலங்கள்தான் இத்தகைய செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். சொத்துக்கள் சேதத்திற்கான இழப்பீட்டை அதில் ஈடுபட்ட கலவரக்காரர்களிடமிருந்தே மீட்டெடுக்க வேண்டும். அதற்கான செயல்முறை விரைவாகவும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது காவல்துறை ஏற்கனவே வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறது. எனவே வன்முறை மற்றும் வெறுப்பு சூழ்நிலையை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் தேவையற்றது. முஸ்லிம் சமூகம் வன்முறைப் பாதையைத் தவிர்த்துவிட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும்’ என கூறினார்.