தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை பரப்பியதாகவும் சமூக வலைதளத்தில் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டிருந்ததாகவும் கூறி, தமிழக பா.ஜ.கவின் மூத்த தலைவர் மற்றும் தமிழக பா.ஜ.கவின் தொழில்துறை பிரிவு மாநிலத் துணைத் தலைவரான செல்வகுமாரை நேற்று அதிகாலை தமிழக அரசின் காவல்துறை கைது செய்துள்ளது. இந்த கைது சம்பவத்திற்கு, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது டுவிட்டர் பதிவில், “தமிழக பா.ஜ.க தொழில்துறை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் செல்வகுமாரை கைது செய்துள்ள அறிவாலய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆளுங்கட்சியின் தவறுகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களைக் கைது செய்வதன் மூலம் ஆளுங்கட்சிக்கு எதிரான குரல்களை அடக்கி, கருத்துச் சுதந்திரத்தை முடக்கி விடலாம் என்று கனவு காண்கிறது திறனற்ற தி.மு.க அரசு. இதற்கெல்லாம், அஞ்சுபவர்கள் அல்ல பா.ஜ.க தொண்டர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.