கோயம்பேட்டில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமிக்குச் சொந்தமான மருத்துவமனை அமைந்திருக்கிறது. இந்த மருத்துவமனை அமைந்திருக்கும் நிலத்தில் 62.93 சதுர மீட்டர் பரப்பளவுகொண்ட நிலத்தை, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒதுக்கி, தமிழக அரசு உத்தரவிட்டது.
கிராம நத்தம் நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி, காலி செய்யும்படி 2011-ம் ஆண்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்தும், நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும், கலாநிதி வீராசாமி சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கலாநிதி வீராசாமி
இந்த வழக்கு, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, “கிராம நத்தம் நிலம் என்பது வீடில்லா ஏழை மக்களுக்கு வழங்குவதற்கானது. அந்த நிலத்தை வணிக பயன்பாட்டுக்குப் பயன்படுத்த முடியாது. மனுதாரர் எம்.பி-யாக இருப்பதாலும், அவரின் தந்தை தமிழக முன்னாள் அமைச்சராக இருந்திருக்கிறார் என்பதாலும், அவர் நிலமற்ற ஏழை அல்ல.
தமிழகத்தில் சமூகநீதி பாதுகாவலர்கள் எனக் கூறும் அரசியல் கட்சியினர், மக்கள் விருப்பத்துக்கு கெளரவம் வழங்க வேண்டும். எனவே, ஒரு மாதத்தில் நிலத்தை காலி செய்து ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால், நிலத்தை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறி, கலாநிதி வீராசாமியின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.