மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “மதுரை மாவட்ட பா.ஜ.க சார்பில் ‘எனது பூத் வலிமையான பூத்’ என்ற திட்டத்தை வடிவமைக்கப்பட்டுள்ளது. பூத் கமிட்டி என்பது தேர்தல் நேரத்தில் மட்டும் பணியாற்றாமல், 365 நாட்களும் மக்கள் பிரச்சினைகளை கையிலெடுத்து செயல்படுத்த வேண்டும் என்பதற்காக புதிதாக வடிவமைக்கப்பட்ட பூத் கமிட்டியை தொடங்கியிருக்கிறோம்.
தமிழக அமைச்சர் பொன்முடி, சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும். 2019 வரை ஹிந்தி என்பது கட்டாய மொழியாக திணிக்கப்பட்டிருந்தது. 1986ம் ஆண்டு வந்த இரண்டாவது கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயமாக்கப் பட்டிருந்தது. இவர்கள் 10 வருடம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருந்தபோதும்கூட ஹிந்தி என்பது கட்டாய பாடமாகத்தான் இருந்தது. 2020ல் புதிய கல்விக் கொள்கை வந்தபிறகுதான், ஹிந்தி என்பது விருப்பப் பாடமாக கொண்டுவரப்பட்டது. ஹிந்தி திணிப்பு எங்கேயும் இருக்கக்கூடாது என்பது பிரதமர் மோடியின் விருப்பம். பா.ஜ.கவின் விருப்பமும் அதுதான்.
தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் புதிய கல்விக் கொள்கையில் இருக்கும் ஒரு அம்சம்தான். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் பெயரை மட்டும் அவர்கள் மாற்றுகின்றனர். மொத்தத்தில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை இன்னொரு பெயரில் வருகிறது. எந்த பெயரில் வந்தாலும் சரி மக்களுக்கு நல்லது நடந்தால் போதும். மத்தியப் பிரதேசத்தில் மருத்துவப் படிப்பை ஹிந்தியில் கொண்டுவந்தபோது, பா.ஜக.தான் முதலில் குரல் கொடுத்தது. தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் படிப்புகளை தமிழில் கொண்டுவர பா.ஜ.க குரல் கொடுத்தது.
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதற்கு காரணம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பழக்கம். போதை பொருள் பழக்கம் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் அதிகமாக உள்ளது. பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் மது பாட்டில்கள் எடுத்து செல்கின்றனர். தமிழகத்தில் மதுவும், கஞ்சாவும் வந்து இளைஞர்களை சீரழித்துக் கொண்டிருக்கிறது. இது எல்லாம் கடந்த ஒரு வருடமாகவே நடைபெறுகிறது. போதை பொருள் கலாசாரத்தை ஒழித்தால் இளைஞர்கள் சமுதாயத்தோடு ஒன்றி வருவார்கள். இல்லையெனில் இளைஞர்கள் வேறு சமுதாயம் வேறு என்ற நிலை வந்து விடும். தமிழகத்தில் காவல் துறையின் கையை கட்டிபோட்டு உள்ளார்கள். முன்பெல்லாம போலீசார் மீது பயம் இருந்தது. காவல் துறைக்கு என சில அதிகாரங்கள் கொடுக்க வேண்டும். போலீசார் லத்தியை பூ போட்டு பூஜை செய்யவா வைத்துள்ளார்கள்? லத்திக்கு என்று ஒரு மகத்துவம் உள்ளது. காவல் துறை சீரழிந்தால் சமுதாயமும் சீரழியும். எனவே சில இடங்களில் காவலர்கள் கடுமையாக இருக்க வேண்டும். காவல் துறையை கட்டிபோட்டால் ரவுடிகள், பெண்களிடம் குற்றத்தில் ஈடுபடுவோர், மது, போதை பொருட்கள் பயன்படுத்துவோரை கட்டுப்படுத்த முடியாது” என கூறினார்.