கவர்னர், குஷ்புவை அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் ஜாமீன் மனு தள்ளுபடி

கவர்னரையும், நடிகை குஷ்புவையும் அவதுாறாக பேசிய வழக்கில் கைதான தி.மு.க., பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஜாமின் கேட்டு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழக கவர்னர் ரவி, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு ஆகியோர் குறித்து, அவதுாறாகவும், அநாகரிமாகவும் பேசியதாக, தி.மு.க., பேச்சாளராக இருந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கொடுங்கையூர் போலீசாரால் கடந்த 18ம் தேதி கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் உள்ள அவரின் ஜாமின் மனுவை, எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், ஜாமின் கேட்டு, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனு: பொதுக் கூட்டங்களில், அரசியல் பிரச்னைகள் குறித்து பேசி, விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். மக்கள் கவனத்தை ஈர்க்க நகைச்சுவையாக பேசுவேன். இது, தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. எனக்கு எதிராக அரசியல்வாதிகள் யாரும் புகார் தரவில்லை. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்ற தயாராக உள்ளதால், ஜாமின் வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதி எஸ்.அல்லி முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, ‘மனுதாருக்கு 65 வயதாகிவிட்டது. எனவே, அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும்’ என, வாதிட்டார். அதற்கு, ‘மனுதாரர் பேசிய வீடியோவை பார்த்துவிட்டு பேசுங்கள்’ எனக்கூறி, விசாரணையை நாளை தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.