விருத்தாசலம் சக்தி நகரில் வைத்திய லிங்கா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி உள்ளது. இதற்கு தாளாளராக இருப்பவர் தி.மு.கவை சேர்ந்த பக்கிரிசாமி. இவர் விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு தி.மு.க கவுன்சிலராகவும் உள்ளார். இவர் விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது பள்ளியில் விருத்தாசலம் புதுப்பேட்டை தேசிங்கு ராஜா நகரில் வசித்து தம்பதியினிரின் 5 வயது சிறுமி யு.கே.ஜி படித்து வந்துள்ளார். இந்நிலையில், வழக்கம் போல் ஏப்ரல் 11 அன்று பள்ளிக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய சிறுமிக்கு பிறப்பு உறுப்புப் பகுதியில் வலி ஏற்பட்டு அழுதுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் சிறுமியை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், இது குறித்து தகவலறிந்த விருத்தாசலம் மகளிர் காவல் துறையினரும் மருத்துவமனைக்கு சென்று சிறுமி மற்றும் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாராணையில், அந்த பள்ளி தாளாளரும், தி.மு.க கவுன்சிலருமான பக்கிரிசாமி, சிறுமிக்கு கடலை மிட்டாய் வாங்கிக் கொடுத்து 5 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை செய்து தி.மு.க கவுன்சிலர் பக்கிரிசாமியை கைது செய்துள்ளனர். இதனால், அவர் தி.மு.கவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.