அம்பேத்கர் படிப்பை ஓரம்கட்டும் தி.மு.க

திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் நிதிநிலை நெருக்கடி காரணமாக டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் படிப்புகள் துறையை தற்போதைக்கு தொடங்க இயலாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பா.ஜ.கவின் ஓ.பி.சி அணியின் மாநில பொதுச் செயலாளருமான வீர. திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள ஒரு முகநூல் பதிவில், “திருவள்ளுவர் பல்கலைக் கழகம் வேலூரில் இயங்கி வருகிறது. இந்தப் பல்கலைக் கழகத்தில், அம்பேத்கர் ஸ்டடீஸ் (Ambedkar Studies) எனும் பெயரில் ஒரு புதிய துறையை உருவாக்க ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அந்த துறையை இன்னும் ஆரம்பிக்கவில்லை. இதனைக் கண்டு வேதனையுற்ற பேராசிரியர் ஒருவர், அம்பேத்கர் ஸ்டடீஸ் துறையை உடனே உருவாக்க வேண்டும் என்று அரசுக்கும் பல்கலைக் கழகத்திற்கும் உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசையும் பல்கலைக் கழகத்தையும் விசாரித்தது. அப்போது, “அந்தத் துறையைத் தொடங்க இப்போது நிதி வசதியில்லை. நிதிநிலை சீரானப் பிறகு தொடங்குகிறோம்” என்று தமிழக அரசு சார்பிலும், பல்கலைக் கழகத்தின் சார்பிலும் தெரிவித்துள்ளனர். ஈ.வெ.ரா பெயரில் என்னென்னவோ செய்யும் தி.மு.க அரசுக்கு, கருணாநிதிக்கு நினைவு சின்னம் கட்ட கோடி கோடியாய் நிதி ஒதுக்கும் தி.மு.க அரசுக்கு, அம்பேத்கர் ஸ்டடீஸ் துறையை தொடங்க மட்டும் நிதி இல்லையா? நாட்டுப் பற்றையும், தேசிய ஒற்றுமையையும் வலியுறுத்தி வந்த அண்ணல் அம்பேத்கரை கண்டுகொள்ளாது தி.மு.க. அந்தத் தி.மு.க.வுக்கு எதிராகவும், அண்ணல் அம்பேத்கருக்கு ஆதரவாகவும் திருமாவளவன் போன்றோரும் குரல் கொடுக்க மாட்டார்கள். மக்கள் உண்மையை உணர வேண்டும். அண்ணல் அம்பேத்கர், நம் தேசத்தின் மாபெரும் தலைவர். அம்பேத்கர் ஸ்டடீஸ் துறையை வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் மட்டுமல்ல, தமிழகத்தின் முக்கியமானப் பல்கலைக் கழகங்கள் அனைத்திலும் விரைவில் தொடங்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.