கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி ‘உங்கள் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின்’ என்னும் ஒரு புதிய பிரச்சாரத்தை திருவண்ணா மலையில் துவக்கியுள்ளார். ”தி.மு.க தலைவர் தான் சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம் என்று சொன்னார். அவரது வழியில் இந்த ஸ்டாலினும் சொன்னதைச் செய்வான். செய்வதைத்தான் சொல்வான் என்று உறுதிமொழியை நான் கோபாலபுரம் இல்லத்தின் வாசலில் இருந்து எடுத்துக் கொண்டேன்” என்று பேசினார். ஸ்டாலின் சொல்வதுபோல் தி.மு.க. தலைவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு சொல்வது ஒன்றும், ஆட்சிக்கு வந்த பினனர், தங்கள் பேச்சுத் திறமையால் அதற்கு விளக்கம் கொடுப்பது என்பதும் வாடிக்கை.
திராவிட நாடு
1949-ல் தி.மு.கவைத் துவக்கியபோது திராவிட நாடு முதன்மையான கொள்கையாகப் பறைசாற்றப்பட்டது. இவர்களின் அடை மொழியில் கூறுவதெனில், “அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு” என்று முழக்கமிட்டார்கள். திராவிட நாட்டை அடைந்தார்களா என்பதை ஸ்டாலின் விளக்கவேண்டும். 1962ல் மத்திய உள்துறை அமைச்சர் ஒய்.பி.சவான் பிரிவினைத் தடை மசோதாவைத் தாக்கல் செய்த உடன், “திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம் எனச் சொல்ல வில்லை; ஒத்திவைத்துள்ளோம், பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்று சொல்லி சமாளித்தார். இன்றுவரை திராவிட நாடு கோரிக்கை என்னவாயிற்று என்பது ஸ்டாலினுக்கே தெரியாது. இதுவே முதல் சறுக்கலாகும்.
ஆளுநர் பதவி –
”தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஆளுநர் பதவியை நீக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும், ஆட்டுக்குத் தாடியும், ஆட்சிக்கு ஆளுநரும் தேவையா” என்று கேள்வி எழுப்பினார்கள். 1967-ல் ஆட்சிக்கு வந்தவுடன், ஆளுநர் பதவியை நீக்கக் கோரும் எந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இன்றுவரை ஆளுநர் பதவியை நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்க முயலவில்லை.
முக்கியமான வாக்குறுதி: ”நேர்மையான தேர்தல் நடக்க, நாங்கள் ஆட்சியிலிருந்தால், தேர்தலுக்கு ஆறு மாதத்திற்கு முன்பே மந்திரி சபையைக் கலைத்துவிட்டு, சுதந்திரமாகத் தேர்தலை சந்திப்போம்” என்று சூளுரைத்த தி.மு.க. தலைவர், ஆட்சிக்கு வந்து தேர்தலை சந்திக்கும்போது, ”மற்ற கட்சிகளும் ஏற்றுக் கொண்டால் நிறைவேற்றலாம்” என்று சொன்னார். தற்போது சொன்னதைச் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் எனக் கூறுகிறார்கள்.
படி அரிசித் திட்டம்
1967-ல் ஆட்சிக்கு வருவதற்குமுன் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், ‘தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ரூபாய்க்கு 3 படி அரிசி’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆட்சியில் அமர்ந்தவுடன் சென்னை, கோவையில் மட்டும் ரூபாய்க்கு 1 படி அரிசி வழங்கப்பட்டது, அதுவும் சில மாதங்களிலேயே நிதிப் பற்றாக்குறையின் காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
குடிசை மாற்று வாரியம்
சென்னை நகரைக் குடிசைகள் இல்லாத நகரமாக்க உருவானதுதான் குடிசை மாற்று வாரியம். 1971ல் குடிசைகளுக்கு மாற்றாக, அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி, அவற்றில் குடிசைவாழ் மக்களைக் குடியமர்த்துவதுதான் திட்டத்தின் நோக்கம். இதற்காக சுதந்திரமடைந்து 25 ஆண்டுகள் வரை எந்தத் தீ விபத்திலும் சிக்காமலிருந்த சென்னைக் குடிசைப் பகுதிகள் தொடர்ந்து ஒவ்வொன்றாகப் பற்றி எரிய ஆரம்பித்தன. அந்தத் தீ விபத்துகளுக்கு ‘பாஸ்பரஸ்’ என்ற, தானாகவே சூரிய ஒளிபட்டு எரியும் பொருளே காரணம் என்று வதந்தி பரவியது. ‘ஆட்சியை இழந்த காங்கிரஸ்காரர்கள்தான், ஆங்காங்கே குடிசைகளைக் கொளுத்திக் கொண்டிருக்கின்றனர்’ என்ற குற்றச்சாட்டும் திட்டமிட்டுப் தி.மு.க.வால் பரப்பப்பட்டது.
அன்றைய காலகட்டத்தில், சென்னையில் அதிகபட்சமாக, 20 ஆயிரம் குடிசைகள் இருந் திருக்கலாம். அந்த 20 ஆயிரம் குடிசைகளுக்கு மாற்றாக 20 ஆயிரம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு, அந்தக் குடிசை வாழ் மக்கள் அடுக்கு மாடிகளில் குடியமர்த்தப்பட்ட பிறகு, சென்னையில் ஒரு குடிசைகூட இருந்திருக்கக் கூடாதல்லவா? இல்லையே! குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளும் பெருகின. சென்னையில் புதுப்புது இடங்களில் குடிசைகளும் முளைத்துக்
கொண்டே இருந்தன. இதுதான் இவர்களின் சொல்வதைச் செய்த லட்சணம்.
நிலமற்ற விவசாயிகளுக்கு இலவச நிலம்
-2006-ல் நிலமற்ற ஏழைகளுக்குத் தமிழ்நாட்டில் உள்ள 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலத்தைப் பயன்படுத்தி ஆளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று கொடுத்த வாக்குறுதி முழுமையாக செயல்படுத்தப்பட்டதா என்னும் கேள்விக்குப் பதில் கிடையாது. கொடுக்கப்பட்ட நிலம் கூட பயன்படுத்தக் கூடியது இல்லை என்பதும் வெட்கக் கேடாகும்.
சமத்துவபுரம்: வீடற்ற -மக்களுக்கு உதவுகிறோம் என்ற போர்வையைப் போர்த்தி, மாநில அரசு உலக வங்கியிடம் வாங்கிய கடன் தொகைதான் தற்போது 4 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. சமத்துவபுரம் என்ற திட்டத்திலும் கழகம் தன் கைவரிசையை அமர்க்களமாக அரங்கேற்றி உள்ளது.
ஜாதி ஒழிப்பு, வீட்டுவசதி என்ற இரு குறிக்கோளுடன் துவங்கப்பட்டது தான் சமத்துவபுரம். 1996 – -2001 கால கட்டத்தில், தி.மு.க., ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் சமத்துவபுரம் 1998ல், மதுரை, திருமங்கலத்தில் கட்டிமுடிக்கப்பட்டு, பயனாளிகள் என்ற பெயரில் கழக உடன்பிறப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒதுக்கீடு இப்படித் தான்: 40 சதவிகிதம் தலித்துகள்; பிற்படுத்தப்பட்டோர், 25 சதவிகிதம்; இதரப் பிற்படுத்தப்பட்டோர் 25 சதவிகிதம். இவ்வாறு 90 சதவிகிதம் போக, மீதி 10 சதவிகித வீடுகளுள் மற்ற சமூகத்தினரும் வாழ்கின்றனர்.
அந்த 10 சதவிகித வீடுகளுள் மற்ற சமூகத்தினர் எனில், முதலியார், செட்டியார், நாடார், நாயுடு, வன்னியர், ரெட்டியார் என யாருக்கு ஒதுக்கப்பட்டது என்ற விவரம் கிடையாது. மேலும், அந்த 145 சமத்துவப்புரங்களில் எத்தனை வீடுகள் பிராமணர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது? பிராமண சமூகத்தினர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் அல்லவே. அவர்களிலும் எத்தனையோ பொருளாதார வசதியற்ற ஏழைகள் இருக்கின்றனர்தானே; அவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள் தானே? அதுமட்டுமா… இன்று அந்த சமத்துவபுரங்களுள் பல சீரழிந்தும், புதர் மண்டியும், விரிசல்கள் கண்டும், இடிந்தும் மக்கள் வாழத் தகுதியற்றவையாக உள்ளன.
சாதி ஒழிப்பு
கவுன்சிலர் தேர்தல் முதல் நாடாளுமன்றத் தேர்தல் வரை அந்தந்தத் தொகுதிகளில் எந்த ஜாதி மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனரோ, அந்த ஜாதியைச் சேர்ந்தவரையே ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளராக நிறுத்தும் திராவிட முன்னேற்றக் கழகம், ஜாதிகளை ஒழிப்பதற்காகத்தான் சமத்துவபுரம் கட்டியது. சமத்துவபுரங்களால் ஜாதிகள் ஒழியவில்லை. எப்படிக் குடிசை மாற்று வாரியங்களால் குடிசைகள் மறையவில்லையோ, அப்படியே சமத்துவபுரங்களால் ஜாதியும் மறைய வில்லை. மாறாக, ஜாதியத் தலைவர்கள் தான் உருவாகிவிட்டனர். இதுதான் தி.மு.க திட்டங்களின் உன்னதம்!
1968-ம் வருடம் கல்லூரிகளில் தமிழ் வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. கல்லூரியில் தமிழ்வழிக் கல்வி அதாவது, இளங்கலை வகுப்புகள் முதல் பொறியியல் கல்விவரை தமிழில் நடத்தப்பட்டன. ஆர்வம் குறைந்த காரணத்தால், கருணாநிதி தமிழ் மீடியத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறினார். ஆனால், ஒருவருக்குக்கூட அந்த முன்னுரிமையில் பணி வழங்கப்படவில்லை.
தமிழ் வளர்ச்சி
தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழி என மார்தட்டியவர்களின் ஆட்சியில்தான் புற்றீசல் போல் கான்வென்டுகள், ஆங்கில வழிக் கல்வி நிலையங்கள் பெருகின. தி.மு.க. தலைவர்கள் நடத்தும் பள்ளிகள் ஆங்கிலவழிக் கல்வி கற்பிக்கப்படும் நிலையங்களாகவே இருக்கின்றன. வீதிதோறும் ஆங்கில நர்சரிப் பள்ளிகள், தடுக்கி விழுந்தால் ஆங்கிலக் கல்வி போதிக்கும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், அரசுப் பள்ளிகள் மூடும் அபாயம் எனப் பல்வேறு நிகழ்வுகள் நடந்த ஆட்சி தி.மு.க.வின் ஆட்சியாகும்.
சமச்சீர் கல்வி
கருணாநிதியின் கடைசிக்கால ஆட்சியில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்விளைவாக ஆங்கிலவழிக் கல்வியைப் போதித்து வந்த மெட்ரிக் பள்ளிகள் அனைத்தும் அரசின் சமச்சீர் கல்விக்கு மாறவேண்டியதாயிற்று. இதனால் மாநிலப்பாடத்தைப் போதித்து வந்த பள்ளிகள் பல மத்திய அரசின் சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்திற்கு மாறிவிட்டன. விளைவு இரு மொழிக் கல்வி என்று மாநில மக்களுக்குப் போடப்பட்டிருந்த குதிரைக் கடிவாளம் விலக்கப்பட்டு மும்மொழிக் கல்வித் திட்டத்தைக் செயல்படுத்த ஆரம்பித்தன பல பள்ளிகள். அதில் திமுகவினரின் பள்ளிகளும் அடக்கம். இப்படி அவர்கள் தீட்டிய திட்டங்கள் அனைத்தும் அவர்களாலேயே மீறப்பட்டுள்ளன. இதில், இவர்கள் எப்போது சொன்னதைச் செய்தார்கள்? இனி சொல்வதை எப்போது செய்வார்கள்? என்பது கேள்விக்குறிதான்.
– ஈரோடு சரவணன்