இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூர் கிறித்துவ உண்டு உறைவிட பள்ளியில் லாவண்யா என்ற மாணவி கிறித்தவ மதத்திற்கு மாற பள்ளி ஆசிரியைகள் நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்தி, மனதளவிலும் உடல் அளவிலும் கொடுமைப்படுத்தப்பட்டார். இதனால் மனமுடைந்த லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை விடியோவில் பதிவு செய்தார். இது சமூக ஊடகங்களில் வைரலான பிறகு தமிழக கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியது என்பதை நாம் மறந்து இருக்க முடியாது. இந்த வழக்கு பொதுநல வழக்காக உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அப்படி எதுவும் தமிழகத்தில் நடக்கவில்லை என மூடி மறைத்து தனது மனுவில் கூறியுள்ளது. கலாக்ஷேத்திராவில் புகார் எழுந்த போது உடனடியாக நீதிபதி தலைமையில் விசாரணை செய்தது மட்டுமல்லாமல் புகார் தெரிவிக்க தனியாக ஒரு மெயில் ஐடி ஏற்படுத்தி விளம்பர படுத்துகிறது. ஆனால் லாவண்யா விடியோவில் தானும் தன் குடும்பமும் மதம் மாற வற்புறுத்துபட்டோம் என்ற போதும் விக்கிரவாண்டி அன்பாலயத்தில் நடந்த கிறித்தவ கொடூர செயல்பாட்டின் போதும் திருப்பூரில் தெருவில் போன முதியவர்களை இழுத்து வந்து மொட்டை அடித்து மதமாற்றி அடைத்து வைத்தபோதும் தமிழக அரசு எந்த தீவிர நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காரணம் தி.மு.க ஆட்சியே கிறித்துவர்கள் போட்ட பிச்சை என்றார் கன்னியாகுமரி பாதிரியார் ஜான் பொன்னையா. ஆனால் சுயமரியாதை பேசும் எந்த தி.மு.க தலைவரும் அதனை கண்டிக்கவில்லை. கிறித்தவர்களால் தான் தமிழர்கள் கல்வியில் முன்னேறினார்கள் என சபாநாயகர் அப்பாவு கூறினார். தமிழறிஞர்கள் யாரும் வாய் திறக்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் மகனும் தி.மு.கவின் அடுத்த வாரிசும் ஆன உதயநிதி நான் ஒரு கிறித்துவன், கிறித்துவ பெண்ணை தான் திருமணம் செய்துள்ளேன் என்றார். அது அவரது தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும் தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் கிறித்தவ மதமாற்றம் மேலும் வேகம் கூடியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஹிந்து பட்டியல் சமூகத்தினர் சலுகைகள் மதமாறிய கிறித்தவர்களுக்கும் தர வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை பா.ஜ.க. தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் எதிர்க்கவில்லை. அப்படி என்றால் தமிழக ஹிந்துக்களின் நிலை என்ன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பள்ளிகளில், மருத்துவமனைகளில், சிறைச்சாலைகளில் என மனத்தாலும் பொருளாதாரத்தாலும் சமூகத்தாலும் பலவீனமானவர்களை குறிவைத்து மதமாற்றம் எனும் கொடூரம் அரங்கேற்றப்படுகிறது. இது மனித உரிமை மீறல்.
இதனைத்தான் ஆசை காட்டி, அச்சுறுத்தி, ஏமாற்றி மதமாற்றம் செய்வது தடுக்கப்பட வேண்டும் என இந்து முன்னணி தொடர்ந்து போராடி வருகிறது. இதன் தாக்கத்தை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். உணர்ந்திருந்தார். மதமாற்றத்தடை சட்டம் கொண்டு வந்து மோசடி மதமாற்றம் தடுக்க வேண்டும் என விரும்பினார். அதனை செல்வி ஜெயலலிதா நிறைவேற்றினார். ஆனால் கிறித்தவ மிஷனரிகளின் அகில உலக மிரட்டலாலும் கூட இருந்தே விலைபோன சில நம்பிக்கை துரோகிகளாலும் அவர் அச்சட்டத்தை வாபஸ் பெற்றார். மதமாற்றம் எனும் மோசடி தடுக்கப்பட வேண்டும். அதிலும் ஹிந்து பெயரில் இருந்து கொண்டு ஹிந்துக்களுக்கான சலுகைகளை அனுபவித்து கொண்டு கிறிஸ்தவர்களாக இருக்கும் கிரிப்டோ கிறிஸ்தவர்கள் ஆபத்தானவர்கள். இன்று கிரிப்டோ கிறித்தவர்கள் ஹிந்து சமய அறநிலையத்துறை வரை ஊடுருவி உள்ளார்கள் என்பது அதிர்ச்சியான தகவல். சென்னை உயர்நீதிமன்றம் ஹிந்து சமய அறநிலையத் துறையில் பணியாற்றுபவர்கள் ஹிந்து நம்பிக்கை உடையவர்கள் என உறுதி மொழி எடுக்க வலியுறுத்தியது. ஆனால் அதனை தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை நிறைவேற்றவில்லை. காரணம் அதில் உள்ள கருப்பு ஆடுகள். எனவே உச்ச நீதிமன்றம் கிறித்தவ மதமாற்றம் குறித்து நாடுநெடுகிலும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து புகார் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். திட்டமிட்ட ரீதியில் மனித உரிமை மீறலாக மன பலவீனமானவர்களை குறிவைத்து மெஸ்மரிசம், ஹிப்நாடிசம் முறையில் மனோவசியம் செய்து மதமாற்றம் நடைபெறுவது குறித்து தீவிர விசாரணை நடத்த இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.