ராதாபுரம் கூடங்குளம் இருக்கன்துறை பகுதியைச் சுற்றி கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், திமுக நிர்வாகிகளுக்கு சொந்தமான குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுகிறது, இரவு, பகல் பார்க்காமல் கல்குவாரிகளில் சக்திவாய்ந்த வெடிகளை வைத்து பாறைகள் தகர்க்கப்படுகிறது என புகார்கள் எழுந்தன. புகார்களின் அடிப்படையில் சேரன்மகாதேவி துணை ஆட்சியர் சிவ.கிருஷ்ணமூர்த்தி திடீர் சோதனையில் ஈடுபட்டார். அப்போது, போலியான ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக கனிமவளங்களை எடுத்துச் சென்ற லாரிகளை எஸ்.பி. மணிவண்ணனுடன் இணைந்து பறிமுதல் செய்தார். இருக்கன்துறையில் இசக்கியப்பன் என்பவரின் பெயரில் இயங்கும் கல்குவாரியில் நடத்திய சோதனையில், 4 லட்சத்துக்கும் அதிகமான கனமீட்டர் கனிமவளம் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. எனவே, அந்த நிறுவனத்திற்கு ரூ.20.11 கோடி அபராதம் விதித்தார். இதனால், ஆத்திரமடைந்த தி.மு.க நிர்வாகிகளின் அழுத்தத்தின் பேரில், துணை ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தியும் எஸ்.பி. மணிவண்ணனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.