திருச்சியில் ”கையில் குஞ்சம் வச்சி கயிறு கட்டி வரவனுங்களா இருந்தா அடிங்க; வெட்டுங்க; பிரதமர் மோடியே வந்தாலும் பார்த்துக்கலாம்,” என, தொ.மு.ச., துணை பொதுச்செயலர் பகிரங்கமாக மிரட்டல் விடுத்து பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி பெல் நிறுவன பகுதி – 2 வளாகத்தில், 14ம் தேதி தி.மு.க., தொழிற்சங்கமான தொ.மு.ச.,வின் வாயில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய சங்க துணை பொதுச்செயலர் பரமேஸ்வரன், ”கையில குஞ்சம் வச்சி, கயிறு கட்டி வந்தாங்கன்னா, அவங்கள நீங்க அடிங்க; வெட்டுங்க. எவன் கேட்குறான்னு பார்க்கலாம். மோடி வேணும்னா வரட்டும்; யார் வேணும்னாலும் வரட்டும்,” என, பேசினார். பா.ஜ.,வினருக்கு எதிராக, தொ.மு.ச., நிர்வாகி பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது, திருச்சி மாவட்ட பா.ஜ.,வினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் மண்டல பா.ஜ., தலைவர் செந்தில்குமார், பெல் போலீஸ் ஸ்டேஷனில், நேற்று புகார் அளித்துள்ளார்.