தி.மு.க கவுன்சிலரின் கணவர் அராஜகம்

மதுரை தெப்பக்குளம் பகலவன் பூக்கார தெருவில் வசிக்கும் ஒரு வயதான தம்பதி, பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டினர். கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புப் பெறுவதற்கான பணிகளை அவர்கள் மேற்கொண்டபோடு, மதுரை மாநகராட்சி 42வது வார்டு தி.மு.க கவுன்சிலர் செல்வியின் கணவர் கார்மேகம், அவர்களது வீட்டுக்கு வந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதை அந்த தம்பதி புதுச்சேரியில் உள்ள தனது மகன் மணிகண்டனிடம் தெரிவித்தனர். இதையடுத்து மணிகண்டன், கார்மேகத்திடம் அலைபேசியில் போனில் பேசினார். அப்போது மணிகண்டனை கார்மேகம், “மோடி திட்டத்தில் பிளான் வாங்காம வீடு கட்டியிருக்கீங்க, பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கும்போது என்கிட்ட ஒரு வார்த்தை கேட்கணுமா, வேண்டாமா, நான் கவுன்சிலர், என்னை கேட்காமல் வீடு கட்டக்கூடாது. நீ நேரில் வா பேசுவோம்” என மிரட்டியுள்ளார். இருவருக்குமான இந்த அலைபேசி உரையாடல் சமூக வலை தளங்களில் வைரலாகியது. இந்நிலையில் மதுரை பா.ஜ.க தலைவர் மகா சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் மணிகண்டன் வீட்டுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். கவுன்சிலரின் கணவரை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் பேசிய மகா சுசீந்திரன், “பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்படும் வீட்டுக்கு பிளான் அப்ரூவல் தேவையில்லை. 350 முதல் 500 சதுர அடி வரை எப்படி வேண்டுமானாலும் வீடு கட்டிக் கொள்ளலாம். இதை குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் உறுதி செய்தால் மட்டும் போதும். வேறு எந்த நிபந்தனையும் இல்லை. இத்திட்டம் வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டம். திட்ட நிதி இடைத்தரர்களின் கைகளுக்கு போகக்கூடாது என்பதற்காக திட்டத்துக்கான நிதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. மத்திய அரசின் இந்த திட்டத்தில் வீடு கட்டியவர்களிடம் தி.மு.க கவுன்சிலரின் கணவர் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இது தொடர்ந்தால் மதுரையில் மக்களைத் திரட்டி பா.ஜ.க போராட்டம் நடத்தும். பயனாளியை மிரட்டிய கார்மேகம் மீது நடவடிக்கை எடுக்க காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்படும்” என தெரிவித்தார்.