கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியத்திற்கு உட்பட்ட அந்தரபுரம், திடல் ஆகிய பகுதிகளின் ஊராட்சி மன்ற தலைவர்கள் நூறுக்கும் மேற்பட்ட அப்பகுதி பொதுமக்களுடன் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று புகார் அளித்தனர். அந்த புகாரில், ‘தோவாளை ஒன்றிய தி.மு.க கவுன்சிலர் பூதலிங்கம்பிள்ளை மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் பஞ்சாயத்து அலுவலக நிதி சார்ந்த விவகாரத்தில் தலையிட்டு மாமூல் கேட்டு தங்களை பணி செய்ய விடாமல் தொடர்ந்து தொந்தரவு செய்கின்றனர். திடல், தெள்ளாந்தி, அந்தரபுரம் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அங்கு ஆளும் கட்சியின் பிரதிநிதிகளாக தங்களை காட்டிக்கொள்கின்றனர். அவர்கள் மீது ஏற்கனவே ஊர்மக்களை மிரட்டியது, பஞ்சாயத்து தலைவர் ராஜலட்சுமியை தாக்கியது சம்பந்தமாக பூதப்பாண்டி காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. என புகார் அளித்துள்ளனர். மேலும், பஞ்சாயத்து தலைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். தி.மு.கவினர் தங்களின் பஞ்சாயத்து அலுவலக பணியில் தலையிடுவதை கண்டிக்க வேண்டும். தாங்கள் அளித்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தனர்.