பன்முகத்தன்மையை வேறுபாடுகளாக பார்க்கக்கூடாது

தெலுங்கானா மாநிலம் பாக்யநகரில் நடைபெற்ற ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூன்று நாள் ஒருங்கிணைப்பு கூட்டம் நிறைவடைந்தது. இதனையடுத்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தேசிய பொதுச்செயலாளர்  டாக்டர் மன்மோகன் வைத்யா, ‘மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் சங்கத்தின் ஸ்வயம்சேவகர்கள் பணியாற்றி வருகின்றனர். சக்ஷம் போன்ற அமைப்புகள் மூலம் உடல் ஊனமுற்றோர் மத்தியிலும் அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அத்தகைய 36 சுயாதீன மற்றும் தன்னாட்சி அமைப்புகள் இக்கூட்டத்தில் பங்கேற்றன. 24 பெண்கள் உட்பட 216 பிரதிநிதிகள் எதிர்பார்க்கப்பட்டனர். அதில் 91 சதவீதம் பேர் கலந்து கொண்டனர். குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு ஒழிப்பு, வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள், பாரதத்தை மையமாகக் கொண்ட கல்விக்கான முயற்சிகள் குறித்து பிரதிநிதிகள் விவாதித்தனர்.

75வது சுதந்திர ஆண்டில், நமது தேசத்தின் சுதந்திரத்திற்காக போராடிய பட்டியலின, பழங்குடியின போராட்ட வீரர்கள் உட்பட ஆயிரக்கணக்கான வெளியில் தெரியாத சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்புகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும். புத்திஜீவிகள் மத்தியில் பணியாற்றும் அமைப்புகளால் இதுபோன்ற 250 பேரின் வாழ்க்கை வரலாறுகள் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன. சன்ஸ்கார் பாரதி அமைப்பு இதுகுறித்து 75 சிறுகதைகளையும் நாடகங்களையும் தயாரித்து உள்ளது.

கொரோனாவின் 3வது அலையை எதிர்கொள்ள 10 லட்சம் பேருக்கும் 6,000 மேம்பாட்டுத் தொகுதிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. முதல் கொரோனா அலையின்போது நின்றுபோன சங்க ஷாகாக்கள் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. 2019 அக்டோபருடன் ஒப்பிடுகையில், 93 சதவீத இடங்களில் சங்கப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

ஆர்.எஸ்.எஸ் இணையதளம் மூலமாகவும் பல இளைஞர்கள் சங்கத்தில் சேர விருப்பம் தெரிவித்து வருகின்றனர். 2017 முதல் 2021வரை,  ஆண்டுதோறும் சராசரியாக 1 லட்சம் முதல் 1.25 லட்சம்  பேர் வரை சங்கத்தில் சேர விருப்பம் தெரிவித்து உள்ளனர். 55 ஆயிரம் ஷாகாக்கள் இயங்குகின்றன, அதில் 60 சதவீதம் மாணவர்கள், இளைஞர்களுக்கானது. 40 சதவீதம் அனைவருக்குமானது என கூறினார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த டாக்டர் வைத்யா, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் ஒருங்கிணைக்கும் பணியில் சங்கம் ஈடுபட்டுள்ளது, விழிப்புணர்வுள்ள சமுதாயம் பிரச்சனைகளைத் தீர்க்கும்.

நமது தேசத்தின் பன்முகத்தன்மையை யாரும் வேறுபாடுகளாக பார்க்கக்கூடாது. பாரதத்தின் பாரம்பரியம் என்பது ஆன்மீக ஒற்றுமையில் கவனம் செலுத்துகிறது. தேசிய கல்விக் கொள்கை, தேசம் முழுவதும் உள்ள நமது ஆன்மீக பன்முகத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.

ஸ்வயம்சேவகர்கள் சமாஜிக் சமரஸ்தா முயற்சிகள் மூலம் ஜாதி பாகுபாடுகள், சமூக வேற்றுமைகளை ஒழிக்கப் பணியாற்றி வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள அறிவுஜீவிகள் அனைத்து துறைகளிலும் காலனித்துவ நீக்கத்திற்கான விழிப்புணர்வை கொண்டு வருகின்றனர்.

பாரதத்தை உலகின் தலைசிறந்த, உன்னத தேசமாக மாற்றுவதுதான் சங்கத்தின் குறிக்கோள்’ என தெரிவித்தார். மேலும், பஞ்சாப்பிற்கு பிரதமர் மோடி சென்றபோது அவரது பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது சாதாரண விஷயமல்ல. இது பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும். பிரதமர் போன்றவர்களை சாலையின் நடுவே தடுத்து நிறுத்துவது நாட்டுக்கு நல்லதல்ல. இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடரக் கூடாது எனவும் கூறினார். செய்தியாளர் சந்திப்பில் அகில பாரதிய பிரச்சார் பிரமுக் சுனில் அம்பேத்கரும் பங்கேற்றார்.