அங்கீகாரமில்லாத கட்சிகள் நீக்கம்

தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெறாத 2,800 அரசியல் கட்சிகள் நாடு முழுதும் உள்ளன. இந்த கட்சிகள் ஆண்டுதோறும் தங்கள் வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், பல அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தங்கள் வரவு செலவு கணக்குகளை பல ஆண்டுகளாக தாக்கல் செய்யவில்லை. மேலும் இவை நன்கொடைகள் பெறுவது, நிதி முறைகேடுகளில் ஈடுபடுவது என செயல்பட்டு வருகின்றன. இந்த கட்சிகளை முடக்க முடிவு செய்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், பதிவு பெற்றும் செயல்பாட்டில் இல்லாத கட்சிகளை கணக்கெடுத்து அவற்றை மாநில தேர்தல் ஆணைய பதிவேட்டில் இருந்து நீக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அக்கட்சிகளுக்கு கடிதம் அனுப்பி சரிபார்க்கும் பணிகள் துவங்கின. அவற்றில் பல கடிதங்கள் தேர்தல் ஆணையத்துக்கே திரும்ப வந்தன. இது போல உள்ள செயல்பாட்டில் இல்லாத 87 கட்சிகளை தேர்தல் ஆணையம் நீக்கியது. மேலும் இதேபோல, 111 கட்சிகளை நீக்க முடிவெடுத்துள்ளது. இந்த கட்சிகள், அடுத்த 30 நாட்களுக்குள் தகுந்த ஆவணங்களுடன் தேர்தல் ஆணையத்தை தொடர்பு கொள்ளவிட்டால் அவை பதிவேடுகளில் இருந்து நீக்கப்படும் என கூறப்படுகிறது.