சொந்த கட்சியையே விமர்சித்த காங்., அமைச்சர் நீக்கம்; சட்டசபைக்குள் விடாமல் தாக்குவதாக குற்றச்சாட்டு

ராஜஸ்தான் சட்டசபையில் சமீபத்தில் ஒரு மசோதா மீதான விவாதத்தின்போது, மணிப்பூர் வன்முறைகள் குறித்து ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பிரச்னையை எழுப்பினர். இதற்கு மாநில ஊர்க்காவல் படை, சிவில் பாதுகாப்பு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகளின் இணை அமைச்சரான ராஜேந்திர சிங் குத்தா ஆட்சேபம் தெரிவித்தார். அவர் பேசுகையில், ‘நாமும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறிவிட்டோம் என்பதே உண்மை. ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. எனவே மணிப்பூர் பிரச்னையை எழுப்புவதற்கு பதிலாக நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’ என்றார். சொந்த கட்சியையே அமைச்சர் ஒருவர் விமர்சித்தது ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ராஜேந்திர சிங் குத்தாவை அமைச்சரவையில் இருந்து அசோக் கெலாட் நீக்கினார். அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், நேற்று (ஜூலை 24) சட்டசபைக்கு வந்த ராஜேந்திர சிங் குத்தாவை, பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து போராடியும் சட்டசபைக்குள் அவரால் நுழைய முடியவில்லை.