துரத்தப்படும் நேர்மையற்ற அதிகாரிகள்

ஊழலை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்ற கொள்கையை மத்திய அரசு பின்பற்றி வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக, இந்த நடவடிக்கையில் கீழ் அரசுத் துறையில்நேர்மையின்றி செயல்பட்ட பலஅதிகாரிகள் அரசு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவ்வகையில், தற்போது தொலைதொடர்புத் துறையில் முதல் முறையாக, நேர்மையற்ற முறையில் செயல்பட்ட 10 உயர் அதிகாரிகளை ஓய்வூதிய விதிகளின்படி கட்டாய ஓய்வில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 9 பேர் இயக்குநர் அந்தஸ்தில் பணியாற்றியவர்கள்.ஒருவர்இணை செயலாளர் அந்தஸ்தில் பணியாற்றியவர் என கூறப்படுகிறது.இதேபோல, கடந்த செப்டம்பர் மாதம் மூத்த பி.எஸ்.என்எ.ல் அதிகாரி முறைகேட்டில் சிக்கினார். பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு மத்திய அமைச்சரவை ஒதுக்கிய ரூ.1.6 லட்சம் கோடி நிதியில் இவர் முறைகேட்டில் ஈடுபட்டது மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நடத்திய கூட்டத்தில் கண்டறியப்பட்டது. அவருக்கு கட்டாய விருப்ப ஓய்வு கொடுக்கப்பட்டது.ரயில்வே துறையிலும் ஒழுங்காகபணியாற்றாத, நேர்மையற்ற அதிகாரிகள் சுமார் 40 பேரை கட்டாய ஓய்வில் அனுப்ப மத்திய அமைச்சர்அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் வழங்கியுள்ளார். இவர்களில் ஒரு செயலாளர், இரு சிறப்பு செயலாளர்களும் அடங்குவர். கடந்த 2014ம் ஆண்டு ஜூலை முதல் 2022 ஜூன் வரை, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 395 அதிகாரிகள் மீது முறைகேடு குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் 203 பேர் குரூப் ஏ அதிகாரிகள், 192 பேர் குரூப் பி அதிகாரிகள் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இந்த ஆண்டு தொடக்கத்தில் தெரிவித்திருந்தது நினைவு கூரத்தக்கது.