அமெரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ராணுவம், பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து, பிரதமர் மோடி – அதிபர் பைடன் விவாதித்தனர். இந்த சந்திப்புக்கு பின், இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது, பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா- – அமெரிக்கா இடையேயான உறவுக்கு வானம் கூட எல்லை கிடையாது. அதிபர் பைடன் உடன் சேர்ந்து எடுக்கப்பட்ட முடிவுகள் வாயிலாக, உலகளாவிய கூட்டு முயற்சிக்கு ஒரு புதிய அத்தியாயம் பிறந்துள்ளது.இது, புதிய பாதை, புதிய ஆற்றலையும் கொடுத்துள்ளது.நிலவுக்கு மனிதனை அனுப்பும் அமெரிக்காவின், ‘ஆர்ட்டெமிஸ்’ ஒப்பந்தத்தில் இணைய சம்மதம் தெரிவித்து உள்ளோம்.இந்தியா – அமெரிக்கா மரபணுவில் ஜனநாயகம் உள்ளது.இந்தியாவில் சாதி, மதம் அடிப்படையில் பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படுகின்றன.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர, ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் என்பதை நாங்கள் ஒப்புக் கொண்டோம்.இந்தியாவை பசுமை எரிசக்தி மையமாக மாற்ற பணியாற்றி வருகிறோம்.இந்தியாவைப் பொறுத்தவரை சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலைக்கு இன்றியமையாத இடம் உண்டு.இந்தியாவின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக மட்டுமல்லாமல், உலகின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம் என, பாரிஸில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய உலகின் ஒரே ‘ஜி – 20’ நாடு, இந்தியா தான்.ஆமதாபாத், பெங்களூரில், அமெரிக்க துணை துாதரகங்கள் திறக்கப்படுவதை வரவேற்கிறோம்.அதே போல், வாஷிங்டனில் உள்ள சியாட்டில் நகரத்திலும் இந்திய துணை துாதரகம் திறக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, அதிபர் ஜோ பைடன் பேசியதாவது: அமெரிக்கா – இந்தியா இடையேயான பொருளாதார உறவு வளர்ந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் இரு மடங்காக அதிகரித்துள்ளது.இதனால், பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.பருவநிலை மாற்றம் என்பது, நாம் எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்னை.அமெரிக்காவில் மூன்று விஷயங்களைச் செய்வதன் வாயிலாக, இந்தப் பிரச்னையை கையாள்வதில் முன்னேற்றம் அடைந்துள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.