ஜார்க்கண்ட் மாநிலத்தில் லித்தியம் தாது கண்டுபிடிப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் லித்திய இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே மாதிரி சில மாதங்களுக்கு முன், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் லித்திய தாது இருப்புகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலம், ஏற்கனவே பல தாதுக்களின் இருப்புகளை கொண்ட மாநிலமாக விளங்குகிறது.

இந்நிலையில், ‘வெள்ளை தங்கம்’ என்று பரவலாக அறியப்படும் லித்தியத்தின் இருப்பும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சூழலில், லித்தியம் உலகெங்கும் அதிகம் நாடப்படும் தாதுக்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. உலகளவில் வெகு சில நாடுகளிளேயே லித்திய தாதுக்கள் உள்ளன.

வரும் 2030ம் ஆண்டுக்குள் புதிய வாகன விற்பனையில், மின்சார வாகனங்களின் பங்கை 30 சதவீதமாக அதிகரிக்கவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை 500 ஜிகா வாட் ஆக உயர்த்தவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இந்தியா தனது லித்தியம் தேவைகளை பூர்த்தி செய்ய, ஹாங்காங் மற்றும் சீனாவையே அதிகளவில் நம்பியுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த இருப்புகளின் கண்டுபிடிப்பு, உள்நாட்டிலேயே அதன் தேவையை பூர்த்தி செய்ய வழிவகுக்கும். மேலும், நாட்டின் இறக்குமதி செலவு மற்றும் வர்த்தகப் பற்றாக்குறையை குறைப்பதற்கும் உதவும். எனினும் இந்த இருப்புகள், ஆய்வுகள் எல்லாம் நிறைவடைந்து, முழு வர்த்தகப் பயன்பாட்டுக்கு வர, இன்னும் ஆறு முதல் எட்டு ஆண்டுகள் வரை ஆகும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.